ஆசிரியைக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இதனால், சக ஆசிரியர்களும், மாணவிகளும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கடலூரில் இரண்டு டோஸ் போட்டுக்கொண்ட அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள், நேற்று முன்தினம் முதல் திறக்கப்பட்டன. 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் நடக்கின்றன. அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின் படி, கடலுார் மாவட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் 94 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
இந்நிலையில், கடலுார் மஞ்சக்குப்பத்தில் உள்ள வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் பள்ளியில் பணிக்கு வந்திருந்த இடைநிலை ஆசிரியை ஒருவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அந்த ஆசிரியைக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இதனால், சக ஆசிரியர்களும், மாணவிகளும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூறுகையில்;- ஆசிரியை, கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களும் போட்டுள்ளார். கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியை. உடல் நலம் பாதித்த ஆசிரியை பாடம் எடுக்க செல்லவில்லை. ஓய்வறையில் இருந்தார். 'இதனால், சக ஆசிரியைகள் மற்றும் மாணவியருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. ஆசிரியை இருந்த அறை, கிருமிநாசினியால் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டது' என்றார்.