கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் நடுக்கடலில் ஆய்வு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் மீன்பிடி படகுகளில் இரட்டை மடி மற்றும் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடலூரில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை சில மீனவர்கள் பயன்படுத்துவதால் அடிக்கடி மீனவ கிராமங்களுக்கிடையே பிரச்சனைகள் வெடித்து வருகிறது. சுருக்கு பை போன்று வட்ட வடிவில் இறுகிக்கொண்டே செல்லும் சுருக்குமடி வலை, கடலில் 500 மீட்டர் ஆழம் வரை செல்லக்கூடியது, மேலும் அதிக மீன்களை பிடிக்கக்கூடியது என்பதால் இதை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருகின்றனர்.
undefined
அண்மைக்காலமாக வங்க கடலை ஒட்டிய கடலூர், நாகைப்பட்டினம், சீர்காழி, மயிலாடுதுறை உள்ளிட்ட மீனவ கிராமங்களில் சுருக்குமடி வலை மீதான தடையை நீக்க வேண்டுமென மீனவர்கள் தொடர் கோரிக்கைவிடுத்து வருகின்றனர். சுருக்குமடி வலையைப் பயன்படுத்தும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுமென கடந்த 2 வாரங்களாக மீனவர்கள் போராட்டமும் நடத்தி வந்தனர். கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தலையிட்டு அந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.
இந்நிலையில் கடலூரில் வங்க கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட வலைகளையும், அதிக திறன் கொண்ட இன்ஜின்களையும் பயன்படுத்துவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. மீன்வளத்துறை சார்பிலும் மீனவர்களுக்கு பல்வேறு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில், கடலூர் ஆட்சியர் பாலசுப்ரமணியம் அதிரடி ஆய்வில் இறங்கியுள்ளார்.
கடலூர் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள் மற்றும் அதில் உள்ள வலைகளை ஆய்வு செய்தார். அந்த பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட, மீன்களின் வளத்தை பாதிக்ககூடிய வலைகளை மீனவர்கள் பயன்படுத்துகிறார்கள் என கேட்டறிந்தார். அத்தோடு நில்லாமல் கடலூர் துறைமுகத்தில் இருந்து படகில் ஏறி நடுக்கடலுக்குச் சென்ற ஆட்சியர் பாலசுப்ரமணியம் ஆழ்கடல் பகுதிகளிலும் ஆய்வுகளை நடத்தினார்.