புதுச்சேரி சந்தையில் வெங்காயம் திருடியவரை வியாபாரிகள் சரமாரியாக தாக்கினர்.
புதுச்சேரியில் இருக்கும் குபேரர் சந்தை பிரபலமானது. இங்கு மொத்தமாகவும் சில்லறையாகவும் வியாபாரம் நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் வேல்முருகன் என்னும் காய்கறி வியாபாரி, கடை வைத்திருக்கிறார். இவரது கடையின் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் இருந்து பூண்டு, மிளகாய், வெங்காயம் போன்றவை திருடு போயிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சக வியாபாரிகள் சந்தையை தீவிரமாக கண்காணிக்க தொடங்கினர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு நபர், இருசக்கர வாகனத்தில் வெங்காய மூட்டைகளை ஏற்றிச் சென்றுள்ளார். அவரை நோட்டமிட்ட வியாபாரிகள், மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் வெங்காய மூட்டைகளை அவர் திருடி சென்றது தெரிய வந்தது. இதனால் ஆத்திரமடைந்த வியாபரிகள் அவரை கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதையடுத்து அவரை எச்சரித்து விடுவித்தனர்.
வெங்காய விலை அசுர வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக வெங்காய மூட்டைகள் திருடு போகும் சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த வாரம் பெரம்பலூரில் வியாபாரி ஒருவர் வைத்திருந்த விதை வெங்காயங்கள் 50 ஆயிரம் மதிப்பில் திருடப்பட்டன. அதே போல மத்திய பிரதேசத்தில் 30 ஆயிரம் மதிப்பிலான வெங்காயங்கள் மர்ம நபர்களால் அறுவடை செய்து திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.