பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் மாநிலத்தின் பெரும்பலான பகுதிகளால் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. இதன்காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய அணைகள் பல நிரம்பியுள்ளதால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதனிடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இரண்டு நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த 48 மணி நேரத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், வேலூர், திருவள்ளுர், திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தநிலையில் நாளை புதுச்சேரியில் இருக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக புதுவை மாவட்டத்தில் இருக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.