கடலூர் அருகே வீட்டிற்குள் நுழைந்த பாம்பை பிடிக்க முயன்றபோது வீட்டின் உரிமையாளர் சாமி வந்து ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டியைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவரது வீட்டைச் சுற்றிலும் நிறைய மரங்கள் இருக்கிறது. இந்தநிலையில் நேற்று சரஸ்வதியின் வீட்டிற்குள் நல்ல பாம்பு ஒன்று புகுந்துள்ளது. அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் அக்கம்பக்கத்தினரை அழைத்தார். பாம்பு புகுந்ததை கேள்வி பட்டு அப்பகுதி மக்கள் திரளவே, வீட்டின் கூரையில் சென்று பாம்பு மறைந்து கொண்டது.
undefined
அங்கிருந்தவர்கள் பாம்புகளை லாவகமாக பிடிக்கும் உயிரின ஆர்வலரான செல்லா என்பவருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த அவர் கூரையில் இருந்த பாம்பை பிடிக்க முற்பட்டார். அப்போது அது படமெடுத்து சீறி ஆடியது. சுமார் 6 அடி நீளத்தில் பார்ப்பவர்களை பதறச் செய்யும் அளவிற்கு இருந்தது. அதை செல்லா பிடிக்க, முயன்றபோது சரஸ்வதி திடீரென சாமி வந்து ஆடினார். பாம்பை பிடிக்க வேண்டாம் என்றும் அது அம்மன் எனவும் கூறினார்.
இதனால் பாம்பை பிடிக்கமுடியாமல் செல்லா திணறினார். பின்னர் ஒருகட்டத்தில் சோர்வடைந்த சரஸ்வதி கீழே அமைதியாக அமர்ந்தார். இதையடுத்து படமெடுத்து ஆடிய நல்லபாம்பை செல்லா பிடித்து ஒரு டப்பாவிற்குள் அடைத்தார். அதை பாதுகாப்பாக கொண்டு சென்ற அவர் அங்கிருக்கும் ஒரு வனப்பகுதியில் விட்டுள்ளார்.