கடலூர் அருகே கார் மீதி லாரி மோதி அதை பல மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற சம்பவம் சாலையில் சென்ற மக்களை பதற வைத்தது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இருக்கிறது கண்டரக்கோட்டை. இங்கிரும் தென்பெண்ணை ஆற்றில் லாரிகளில் மணல் அள்ளிச் செல்வதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு லாரி ஒன்று தென்பெண்ணை ஆற்றில் இருந்து மணல் எடுத்து சென்றுள்ளது. பண்ருட்டி அருகே இருக்கும் நான்குமுனை சந்திப்பில் வேகமாக வந்தபோது லாரியில் பிரேக் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் மீது இடித்துத்தள்ளி சென்றிருக்கிறது. இதைப்பார்த்து பதறிப்போன பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடியிருக்கின்றனர். அந்த நேரத்தில் எதிரே கார் ஒன்று வந்துள்ளது. வேகமாக வந்த லாரி கார் மீது பயங்கரமாக மோதி இருக்கிறது. மோதிய வேகத்தில் காரை பல மீட்டர் தூரத்திற்கு லாரி இழுத்துச் சென்றுள்ளது.இதில் சாலையில் நின்று கொண்டிருந்த போக்குவரத்து காவலர் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.
இந்த பயங்கர விபத்தில் தட்டாம்பாளையத்தைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவர் உயிரிழந்தார். காரில் இருந்தவர்கள் மற்றும் சாலையில் சென்றவர்கள் என பலர் காயமடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்த ரங்கநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.