2 மாதம் காத்திருக்க முடியாதா? பயிர்கள் அழிக்கப்படும் காட்சியைக் கண்ட போது எனக்கு அழுகை வந்தது! நீதிபதி வேதனை!

By vinoth kumarFirst Published Jul 29, 2023, 6:31 AM IST
Highlights

அரிசிக்கும், காய்கறிக்கும் அடித்துக் கொள்ளும் காட்சிகளை நம் தலைமைுறையிலேயே நாம் காணப் போகிறோம். அப்படி ஒரு நிலை வரப்போகிறது. அப்போது இந்த நிலக்கரி எல்லாம் பயன்படாது. இந்தக் கருத்துகளுக்காக என்எல்சி நிர்வாகம் கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை.

நெய்வேலியில் நெற்பயிர்களை பொக்லைன் இயந்திரம் கொண்டு அழித்து கால்வாய் தோண்டும் பணியை பார்க்கும்போது அழுகை வந்தது என நீதிபதி தண்டபாணி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

என்எல்சி நிர்வாகத்திற்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பிரச்னை தொடர்பாக தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடைவிதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் என்.எல்.சி. தரப்பில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் போராட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு, வீடியோ ஆதாரம் தாக்கல் செய்யப்பட்டது.

இதையும் படிங்க;- கைது, தடியடி, கண்ணீர்புகை குண்டு வீச்சு போன்ற அடக்குமுறையால் பாமகவை கட்டுப்படுத்த முடியாது- சீறும் ராமதாஸ்

இதையடுத்து, நீதிபதி என்எல்சி நிறுவனம் மற்றும் அங்கு பணிக்கு செல்லும் ஊழியர்களுக்கு எவ்வித  இடையூறும் ஏற்படாத வகையில் கடலூர் மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 3ம் தேதி அறிக்கை  தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

இதனிடையே என்எல்சி நிறுவனத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் கால்வாய் அமைக்கும் பணிகளுக்கு எதிர்ப்பு கிளம்பியது குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். என்எல்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிலத்தின் மதிப்பை விட மூன்று மடங்கு அதிகமாக இழப்பீடு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், பத்தாண்டுகளுக்கு முன்பாக இழப்பீடு கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது நிலத்தை கையகப்படுத்த நில உரிமையாளர்கள் எதிர்ப்பதாகவும் குற்றம்சாட்டினார். 

இதையும் படிங்க;- முதல்வர் எங்கே? எடப்பாடி பழனிச்சாமி எங்கே? கடலூரை அதிர வைத்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு !!

அப்போது குறுக்கிட்ட நீதிபதி தண்டபாணி 20 ஆண்டுகளாக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை கையகப்படுத்தாமல் இருந்துவிட்டு தற்போது  பயிரை அறுவடை செய்யும் வரை இரண்டு மாதங்கள் காத்திருக்க முடியாதா என கேள்வி எழுப்பினார். பயிரிடப்பட்ட நிலத்தில் புல்டோசர்களை விட்டு கால்வாய் தோண்டும் பணிகளை பார்க்கும் போது அழுகை வந்ததாக நீதிபதி வேதனை தெரிவித்தார். நிலத்தை எடுக்க ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், பயிர்கள் அழிக்கப்படுவதை ஏற்க முடியாது என்றார். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என பாடிய வள்ளலார் ஊரிலேயே பயிர்கள் அழிப்பு. அரிசிக்கும், காய்கறிக்கும் அடித்துக் கொள்ளும் காட்சிகளை நம் தலைமைுறையிலேயே நாம் காணப் போகிறோம். அப்படி ஒரு நிலை வரப்போகிறது. அப்போது இந்த நிலக்கரி எல்லாம் பயன்படாது. இந்தக் கருத்துகளுக்காக என்எல்சி நிர்வாகம் கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை.

இந்த விசாரணையின்போது குறுக்கிட்ட என்எல்சி தரப்பு வழக்கறிஞர் இந்த நீதிமன்ற அறையில் எரியும் மின் விளக்குகள், குளிர் சாதன வசதிக்கான மின்சாரம் கூட நிலக்கரியில் இருந்து தயாரிக்கப்பட்டது தான் என்று தெரிவித்தார். இதையடுத்து, தனது அறையில் உள்ள குளிர் சாதன வசதியை நிறுத்திவைக்க நீதிபதி உத்தரவிட்டார். பூமியில் உள்ள அனைவரும் ஏசி காற்றில் வாழ்வது இல்லை. புங்கை மரத்தின் காற்றிலும், வேப்ப மரத்தின் காற்றிலும் இளைப்பாறும் ஏராளமானவர்கள் உள்ளனர். அதிகாரிகள் இதனை உணர வேண்டும் என்று நீதிபதி தனது வேதனையையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தினார்.

click me!