கடலூரில் 19ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி கடற்கரையில் பால் ஊற்றி, மலர் தூவி பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி சுனாமி பேரலை தாக்கியது. இதனால் கடலோர கிராமங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. கடலோர மாவட்டங்களில் வசித்த ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். சென்னை கடலோர பகுதிகளிலும் உயிரிழப்புகள் அதிகமாக இருந்தன. இதனால், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26ம் தேதி சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த நிலையில் 19-வது ஆண்டு சுனாமி நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. சுனாமி கோர தாண்டவம் ஆடிய தினம் நிகழ்ந்து 19 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஆறாத வடுக்களாகவே பொதுமக்களை வாட்டுகிறது. சுனாமியால் உறவினர்களை பறிகொடுத்தவர்களின் துயரம் இன்னும் நீங்காமல் நீடிக்கிறது. கட லூர்மாவட்டத்தில் மட்டும் சுனாமி பேரலையில் சிக்கி 610 பேர் பலியாகினர். இந்நிலையில் சுனாமி பேரலையால் பலியானவர்களின் 19ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி கடலூர் முதுநகர் சிங்காரத்தோப்பில் உள்ள சுனாமி நினைவுத்தூணுக்கு சுனாமியில் பலியானவர்களின் உறவினர்கள் மலர் வளையம் வைத்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பாக அதன் தலைவர் சுப்பராயன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊர்வலமாக சென்று கடற்கரையில் அஞ்சலி செலுத்தினர். அப்போது பெண்கள் கடலில் பால் ஊற்றியும் மலர்தூவியும், துக்கம் தாங்காமல் கதறி அழுதனர். கடற்கரை மணலில் மெழுகு வர்த்தி ஏற்றியும் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். சுனாமியால் இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கடலூர் மாவட்ட மீனவர்கள் யாரும் இன்று மீன்பிடி தொழிலுக்கு செல்லவில்லை. இதனால் திருப்பாதிரிப்புலியூர், மஞ்சக்குப்பம், முதுநகர், கிஞ்சம்பேட்டை ஆகிய இடங்களில் மீன்மார்க்கெட்டுகள் அடைக்கப்பட்டுள்ளன.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D