போலீசாரின் சோதனையில் டோக்கன்களை கலர் ஜெராக்ஸ் எடுத்து சிலர் மதுபானம் வாங்க முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து அதிரடி நடவடிக்கையில் இறங்கிய போலீசார் போலி டோக்கன் மூலம் மது வாங்க முயன்றதாக 16 பேரை கைது செய்துள்ளனர்.
இந்தியா முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் அசுர வேகம் எடுத்துள்ளது. நேற்று நாளில் 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,108 ஆக உயர்ந்து இருக்கிறது. இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு தமிழ்நாட்டில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மே 7ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டன. தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்படும் என அரசு அறிவித்திந்திருந்தது. கொரோனா பரவுதல் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் டாஸ்மாக் கடைகளை திறப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து டாஸ்மாக் மூடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையில் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டது.
undefined
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் விசாரணை நேற்று நிறைவடைந்த நிலையில் மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு உச்ச நீதிமன்றம் இடைகால தடை விதித்தது. இதையடுத்து தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. காலை முதலே குடிமகன்கள் கடையில் கூட்டம் கூட்டமாக திரண்டு வரும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கடைக்கு வருபவர்கள் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டிருக்கும் வழிகாட்டுதல்கள் அடிப்படையில் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
இதனிடையே கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் விதமாக நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் விநியோகித்து மது வழங்க அரசு அறிவுறுத்தி இருக்கிறது. இதற்காக சிவப்பு, ஊதா, பச்சை உள்ளிட்ட 7 வண்ணங்களில் டோக்கன் அச்சடித்து, நேரம் குறிப்பிடப்பட்டு டாஸ்மாக் நிர்வாகம் குடிமகன்களிடம் விநியோகித்து வருகிறது. கடலூர் மாவட்டத்திலும் இன்று காலை 10 மணி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை தொடங்கியுள்ளது. இதற்காக அங்கு டோக்கன் வழங்கப்பட்டு கொண்டிருந்தது. அப்போது போலீசாரின் சோதனையில் டோக்கன்களை கலர் ஜெராக்ஸ் எடுத்து சிலர் மதுபானம் வாங்க முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து அதிரடி நடவடிக்கையில் இறங்கிய போலீசார் போலி டோக்கன் மூலம் மது வாங்க முயன்றதாக 16 பேரை கைது செய்துள்ளனர். ஒரு டோக்கன் 200 ரூபாய் வரையில் விற்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. கூட்டத்தை தவிர்க்க டோக்கம் முறையை அறிமுகம் செய்தால் அவற்றிலும் போலிகளை தயாரித்த குடிமகன்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.