கடலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை தொற்றால் அடுத்தடுத்து 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களாகவே கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. வடமாநிலங்களில் பரவி வந்த கருப்பு பூஞ்சை தொற்று கடந்த சில நாட்களாகவே தமிழகத்திலும் அதிக அளவில் பாதிப்புகளை உருவாக்கி வருகிறது. நேற்று வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட 40 பேர் சிகிச்சை பெற்று வருவதாக வெளியான செய்தி மக்களை பீதியில் ஆழ்த்திய நிலையில், கடலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை தொற்றால் அடுத்தடுத்து 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் சேத்தியாத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 54) என்பவர் கடந்த 8ம் தேதி சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த் தொற்று அறிகுறிகளுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா நோய்த்தொற்று உறுதியானது. அவருக்கு மருத்துவர்கள தீவிர சிகிச்சை அளித்த போது சர்க்கரை நோய் அளவு அதிகரித்து அவரது கை, விரல், முகம் கருப்பாக மாறியது. கண் வீக்கமும் ஏற்பட்டது. இதையடுத்து அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் இருப்பதை கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து, அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார்.
இதேபோல் பண்ருட்டி தட்டாஞ்சாவடியைச் சேர்ந்த ராஜேஸ்வரி (54) என்பவர் கடந்த 10ஆம் தேதி நோய்த் தொற்று அறிகுறிகளுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கும் கருப்பு பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் வேப்பூர் ராமாபுரத்தைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவமனையில் கொரோனா பாதிப்பிற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த ரவிக்குமாருக்கு சர்க்கரை அளவு அதிகரித்ததை அடுத்து முகம், கை, கால் கருப்பு நிறமாக மாறியது. அவருக்கு கருப்பு பூஞ்சை தொற்றை உறுதி செய்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர், இருப்பினும் அவரும் சிகிச்சை பலனின்றி காலமானார். சேத்தியாதோப்பு பகுதியைச் சேர்ந்த மீனா என்பவர் சென்னை தனியார் மருந்துவமனையில் சிகிச்சையின் போது கருப்பு பூஞ்சை நோயால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.