இந்நிலையில் கடலூரி நடத்தப்பட்ட வாகன சோதனையில் சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான மக்கள் நீதி மய்யம் கட்சியின் பரிசு பொருட்கள் சிக்கியுள்ளது.
தமிழகம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதலே தமிழகத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. எனவே பொதுமக்களுக்கு எவ்வித பரிசுப்பொருட்களையும் வழக கூடாது என அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் ஊழல் இல்லாத ஆட்சியை கொடுப்பேன் என அரசியலில் களம் கண்டுள்ள கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி பெயரில் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வருகிற சட்டமன்ற தேர்தலில் 3வது கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன், சீரமைப்போம் தமிழகத்தை என்ற தலைப்பில் கடந்த டிசம்பர் 13ம் தேதி முதல் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தினை வழங்குவேன் என்ற பிரச்சாரத்தை தமிழகம் முழுவதும் முன்னெடுத்து வருகிறார்.
சமீபத்தில் கமல் ஹாசன் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கூட ஒரு வாக்குக்கு ரூ.2,000 முதல் ரூ.10 ஆயிரம் வரை பணம் கொடுத்து வாக்குகளைப் பெற திராவிடக் கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வருகின்றன. இது ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் செயல். காசு கொடுத்து அதிகாரத்தைக் கைப்பற்றுபவர்கள் நிச்சயம் நல்லவர்களாக இருக்க முடியாது. போட்ட பணத்தை ஒன்றுக்குப் பத்தாக எடுக்க நிச்சயம் ஊழல் செய்வார்கள். தமிழக தேர்தல் ஆணையம் விழிப்புடன் செயல்பட்டு வாக்குகளுக்குப் பணம், பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்வதைத் தடுத்து நேர்மையான நியாயமான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியிருந்தார்.
இந்நிலையில் கடலூரில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான மக்கள் நீதி மய்யம் கட்சியின் பரிசு பொருட்கள் சிக்கியுள்ளது. புதுச்சேரியில் இருந்து தமிழகம் நோக்கி வந்த வேனை கடலூரில் தடுத்து நிறுத்தி தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொப்பி, டீசர்ட், எவர் சில்வர் பாத்திரங்கள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள் வேனை பறிமுதல் செய்துள்ளனர். இதனால் கழக அரசியலுக்கு மாற்று எனக்கூறி வந்த கமல் கட்சி களங்க அரசியலுக்கு காலாடி எடுத்து வைத்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.