கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி தனது மனைவியுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய சம்பவத்தால் சலசலப்பு.
கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் பகுதியில் கடந்த 24ம் தேதி நடபெற்ற பிறந்த நாள் விழாவில் ரௌடி சூர்யா பட்டா கத்தியுடன் நடமாடியுள்ளார். பின்னர் தனது இருசக்கர வாகனத்தில், பட்டா கத்தியை தரையில் தேய்த்தபடி அதிவேகமாக சென்றுள்ளார். அப்போது சாலையில் சென்றுகொண்டிருந்த பிரகாஷ் என்பவர் மீது பட்டாகத்தி பட்டதில் அவர் படுகாயமடைந்தார். இதனைத் தொடர்ந்து திருப்பாதிரிபுலியூர் காவல் துறையினர் சூர்யா மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய முற்பட்டனர்.
கைது நடவடிக்கையின் போது தப்பியோட முயன்ற சூர்யா கீழே விழுந்ததில் கை, காலில் எழும்பு முறிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட சூர்யா சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனிடையே கடந்த 1ம் தேதி சூர்யா மருத்துவமனையில் இருந்தபடி தனது மனைவியுடன் மருத்துவமனையில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ, புகைப்படம் இணையத்தில் வைரலாகி காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முதல்வரின் வருகைக்காக காவலர் செய்த செயல்; பரிதாபமாக உயிரிழந்த சிறுவன் - சென்னையில் பரபரப்பு
இது தொடர்பான விசாரணை முடிவில் மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் கவியரசன், வேல்முருகன், சாந்தகுமார் ஆகிய மூவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் கைது செய்யப்பட்ட ரௌடி சூர்யா இரவோடு இரவாக கடலூர் அரசு மருத்துவமனையில் இருந்து சென்னை அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.