வள்ளல் பெருமானாரை வணங்கிப் போற்றுவதற்காக இலட்சக்கணக்கான அடியவர்கள் கூடும் வடலூர் பெருவெளியை காக்க போராடும் மக்களை காவல்துறையை ஏவி கைது செய்வதென்பது எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும்.
வடலூர் வள்ளலார் பெருவெளியை வலுக்கட்டாயமாக கையகப்படுத்தினால் மாபெரும் மக்கள் போராட்டத்தை திமுக அரசு எதிர்கொள்ள நேரிடும் என சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: சனாதனத்திற்கு எதிராக சமரச சன்மார்க்கம் என்னும் தமிழர்களின் சமத்துவ மெய்யியலை மீட்டெடுத்த திருவருட்செல்வர் வள்ளலார் வாழ்ந்து வழிகாட்டிய வடலூர் பெருவெளியை, ஆய்வு மையம் என்ற பெயரில் திமுக அரசு வலுக்கட்டாயமாக கையகப்படுத்தி கட்டுமானப்பணிகளை தொடங்கியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
இதையும் படிங்க: Seeman: ஒரே நாளில் கூண்டோடு காலியான நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்.! சீமான் ஷாக் - காரணம் என்ன தெரியுமா.?
வள்ளல் பெருமானார் தமது திருக்கரங்களால் கட்டமைத்த பெருவெளியை கட்டிடங்கள் கட்டி சிறுவெளியாக்க முயலும் திமுக அரசின் முடிவுக்கு எதிராக பெருவெளிக்கு நிலம் கொடையாக கொடுத்த கிராம மக்களின் வாரிசுகளும், வள்ளலாரின் மெய்யியல் அன்பர்களும், பொதுமக்களும், பல்வேறு அரசியல் இயக்கத்தினரும் கடும் எதிர்ப்பினை தெரிவித்து அறவழியில் போராடும் நிலையில் திமுக அரசு அவர்களை அதிகார கரங்கொண்டு ஒடுக்கி கைது செய்வதென்பது கொடுங்கோன்மையாகும்.
வள்ளலார் ஆய்வு மையத்தை வடலூருக்கு அருகிலேயே யாருக்கும் பாதிப்பில்லாத வேறு பகுதியில் அமைத்திட வேண்டுமென நாம் தமிழர் கட்சி தொடர்ந்து குரல்கொடுத்து வருவதுடன் களத்தில் இறங்கி போராடியும் வருகிறது. ஏறத்தாழ 70 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள ஆய்வு மையத்தால் அங்கு கூடும் அடியவர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாக நேரிடும் என்பதோடு, கூட்ட நெரிசல் ஏற்பட்டு எதிர்காலத்தில் விபத்துகள் நிகழவும் வாய்ப்பேற்படும். எனவே, வள்ளலார் பன்னாட்டு ஆய்வு மையத்தை, வடலூரில் வேறு பகுதியில் அமைக்க வேண்டும் என்ற வடலூர் மக்கள் மற்றும் வள்ளல் பெருமானாரின் அடியவர்களின் கோரிக்கையை திமுக அரசு ஏற்பதே நியாயமானதாக இருக்கும். மாறாக உண்மை ஒளியை காண்பதற்காக அருட்செல்வர் வள்ளலாரால் அமைக்கப்பட்ட வடலூர் பெருவெளியை ஆக்கிரமித்து, அடியவர்களின் மனதை புண்படுத்தி ஆய்வு மையம் அமைப்பதென்பது வள்ளலாரின் மெய்யியல் நோக்கத்தையே சிதைப்பதாகிவிடும்.
இதையும் படிங்க: பாஜகவுடன் கூட்டணி சேர்ந்திருந்தால் ரூ.500 கோடி கிடைத்திருக்கும்: சீமான்!
வள்ளல் பெருமானாரை வணங்கிப் போற்றுவதற்காக இலட்சக்கணக்கான அடியவர்கள் கூடும் வடலூர் பெருவெளியை காக்க போராடும் மக்களை காவல்துறையை ஏவி கைது செய்வதென்பது எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும். திமுக அரசின் இத்தகையை அதிகார அடக்குமுறைக்கு வரும் தேர்தலில் வடலூர் பகுதி மக்களும், வள்ளலார் வழி மெய்யன்பர்களும் தக்கப்பாடம் புகட்டுவார்கள்.
ஆகவே, தமிழ்நாடு அரசு வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய உயர்மநேயர், தமிழர் மெய்யியல் மீட்பர், வள்ளல் பெருமானார் வாழ்ந்து வழிகாட்டிய வடலூர் பெருவெளியைக் கையகப்படுத்துவதை விடுத்து, புதிதான அமைக்கப்படுகின்ற பன்னாட்டு ஆய்வு மையத்தை வடலூரில் வேறு பகுதியில் அமைத்திட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். மக்களின் விருப்பத்திற்கு மாறாக, வடலூர் வள்ளலார் பெருவெளியை வலுக்கட்டாயமாக கையகப்படுத்தினால் மாபெரும் மக்கள் போராட்டத்தை திமுக அரசு எதிர்கொள்ள நேரிடும் எனவும் எச்சரிக்கிறேன் என சீமான் ஆவேசமாக கூறியுள்ளார்.