பண்ருட்டி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பண்ருட்டி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை அரசு வேகத்தில் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. குறிப்பாக தற்போது மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தாலும் கிராமப்புற பகுதிகளில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிகை உயர்ந்து வருகிறது. இந்நிலையில், பண்ருட்டி மீனாட்சி அம்மன் பேட்டை தெருவை சேர்ந்தவர் பெருமாள். வெள்ளி நகை வியாபாரி. இவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் மேல்மருவத்தூரில் உள்ள தனியார் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி பெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார். ஏற்கனவே கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பெருமாளின் மனைவியும், மகனும் உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொரோனா தொற்றினால் அடுத்தடுத்து உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.