கடலூர் சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் இன்று 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இன்று காலையில் 5 கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது கிலோ 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
நாடு முழுவதும் வெங்காய விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதனால் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் என பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சியில் உள்ளனர். வெங்காய விலை உயர்வால் உணவகங்களில் வெங்காயத்தை உபயோகப்படுத்துவதை உரிமையாளர்கள் தவிர்த்து வருகின்றனர். வெங்காய விலையை கட்டுப்படுத்த அரசு முயற்சி எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடலூர் சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் இன்று 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இன்று காலையில் 5 கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது கிலோ 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வியாபாரிகளிடம் ஏற்பட்ட போட்டி காரணமாக விலை தாறுமாறாக குறைத்து விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் கடலூர் சந்தையில் பொதுமக்கள் கூட்டம் அங்கு அலைமோதுகிறது. விலை குறைவால் கடலூர் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளிலும் இருந்தும் மக்கள் திரண்டு வந்து வெங்காயத்தை வாங்கி செல்கின்றனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கடலூரில் மட்டும் கடந்த மூன்று நாட்களாக வெங்காயம் மிக குறைந்த விலையில் விற்கப்படுகிறது. பதுக்கல் தொடர்பான சோதனை மற்றும் பெங்களுருவில் வெங்காய விலை வீழ்ச்சி ஆகியிருப்பதால் கடலூரில் விலை குறைந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். நேற்று ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய்க்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.