கோவையில் வலிமை திரைப்படம் வெளியான திரையரங்கு முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் வலிமை திரைப்படம் வெளியான திரையரங்கு முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித்குமார் நடித்த வலிமை திரைப்படம் இன்று வெளியிடப்பட்டது. இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் இன்று அதிகாலையிலேயே ரசிகர்களுக்கான சிறப்பு காட்சிகளாக வெளியானது. திரைப்படம் வெளியான திரையரங்குகள் முன்பாக ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கூடியிருந்தனர். பட்டாசு வெடித்தும், நடனமாடியும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவியதால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
கோவை மாவட்டத்தில் 20 திரையரங்குகளில் நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்நிலையில், கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள அர்ச்சனா திரையரங்கம் முன்பு ரசிகர்கள் திரண்டு இருந்த போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசிவிட்டு தப்பிச் சென்றனர். பெட்ரொல் குண்டு இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்ட பகுதியில் விழுந்து வெடித்தது.
இதில், ஒரு இருசக்கர வாகனம் லேசான சேதம் அடைந்தது. அங்கு நின்று கொண்டு இருந்த ராமசந்திரன் என்பவருக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்துது விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பதிவாகியுள்ள சிசிடிவி கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.அதிகாலை நேரத்தில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.