பொள்ளாச்சி அருகேயுள்ள பிரசித்தி பெற்ற சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திறளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள சூலக்கல் மாரியம்மன் கோயில் தேர்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். சூலக்கல் மாரியம்மன் கோயில் திருவிழா, கடந்த, 8-ம் தேதி திருத்தேர் முகூர்த்தக்கால் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து பூச்சாட்டு விழா, கிராம சாந்தி, வாஸ்து சாந்தி மற்றும் கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
கோயிலில், தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றதுடன், காலை மற்றும் இரவு நேரங்களில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று, பூவோடு எடுத்தல், அம்மன் ஊஞ்சல் உற்சவம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு மாவிளக்கு, பொங்கல் வழிபாடும், இரவு 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், நேற்று காலை 5 மணிக்கு மாரியம்மன், விநாயகர் திருத்தேர் புறப்படுதல் நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதையடுத்து 3 நாட்கள் நடைபெறும் தேர்த்திருவிழா நேற்று மாலை 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
இதற்காக 36 அடி உயரம் உள்ள அம்மன் தேர், 15 அடி உயரம் உள்ள, விநாயகர் தேர் தயார் படுத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இந்த தேர் திருவிழா நேற்று மாலை தொடங்கியது. மாலை 4 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேரோட்டம் தொடங்கியது.
தேரோட்டதை புரவிப்பாளையம் ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர்கள், இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் முன்னிலையில் தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் விழாவுக்குழுவினர் செய்திருந்தனர்.