கோவை அருகே கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டுயானையை பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக போராடி வருகின்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே இருக்கிறது அர்த்தநாரிபாளையம் கிராமம். இங்கிருக்கும் வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று அவ்வப்போது ஊருக்குள் புகுந்து பொதுமக்களை பயமுறுத்தி வந்தது. வீடுகள், பயிர்களை நாசம் செய்யும் இந்த காட்டு யானை அரிசியை அதிகம் விரும்பி உண்பதாக அந்த கிராமத்தினர் கூறுகின்றனர். அதன்காரணமாக அதற்கு 'அரிசி ராஜா' என்று பெயரிடப்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஊருக்குள் புகுந்த அரிசி ராஜா, நான்கு பேரை மிதித்து கொன்றது. தீவிரமுயற்சிகளின் கீழ் அப்போது பிடிக்கப்பட்ட காட்டு யானை, டாப் ஸ்லிப் வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டுள்ளது.
undefined
ஆனால் அதன்பிறகு மீண்டும் 3 பேரை அரிசி ராஜா காட்டுயானை மிதித்து கொன்றதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தற்போது அர்த்தநாரிபாளையம் கிராமத்திற்குள் புகுந்திருக்கும் யானை, அண்மையில் விவசாயி ஒருவரை கொன்றது. இதனால் பயந்து போயிருக்கும் ஊர் மக்கள், மலை உச்சியில் இருக்கும் கோவிலில் தஞ்சமடைந்துள்ளனர். இதனிடையே அரிசி ராஜாவை பிடிக்க வனத்துறையினர் முயன்று வருகின்றனர்.
இதற்காக இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. யானை, அரிசியை அதிகம் விரும்பி சாப்பிடவதால் அரிசி மூடைகளும் கொண்டு வரப்பட்டு முயற்சிகள் நடந்து வருகிறது. யானையின் இருப்பிடத்தை ட்ரோன் வைத்து கண்டுபிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யானை பிடிபட்டால் அதை டாப்ஸ்லிப் வராகழியார் யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லப்பட இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: திறந்தவெளி போர்வெல்களுக்கு சமாதி கட்டும் நல்ல உள்ளங்கள்..! பாராட்டுவோமே..!