தொண்டாமுத்தூரின் பசுமை பரப்பை 33% ஆக அதிகரிக்கும் வரை மரம் நடும் பணி தொடரும்..! காவேரி கூக்குரல் தகவல்

By karthikeyan VFirst Published Oct 13, 2022, 9:44 PM IST
Highlights

பசுமை தொண்டாமுத்தூர் திட்டத்தின் கீழ் 3வது கட்டமாக ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியின் தொடக்க விழா வலையன்குட்டை கிராமத்தில் நடைபெற்றது. 
 

கோவை தொண்டாமுத்தூர் பகுதியின் பசுமை பரப்பை 33 சதவீதமாக அதிகரிக்கும் வரை விவசாய நிலங்களில் மரம் நடும் பணிகளை நாங்கள் தொடர்ந்து செய்வோம்” என காவேரி கூக்குரல் இயக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் கூறினார்.

‘பசுமை தொண்டாமுத்தூர்’ திட்டத்தின் கீழ் 3-வது கட்டமாக 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியின் தொடக்க விழா வலையன்குட்டை கிராமத்தில் இன்று (அக்.13) நடைபெற்றது.

இதையும் படிங்க - நல்ல மழைக்கு ஈஷா வழங்கிய 8 கோடி மரங்களும் காரணம்! காவேரி கூக்குரல் விழாவில் தமிழக விவசாய சங்க தலைவர் பாராட்டு

இதில் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் பேசுகையில், “காவேரி கூக்குரல் இயக்கத்தின் கீழ் ‘பசுமை தொண்டாமுத்தூர்’ என்ற திட்டத்தை கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி தொடங்கினோம். ஒரு வருடத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி விவசாய நிலங்களில்  நட வைப்பது தான் எங்கள் இலக்காக இருந்தது. ஆனால், இத்திட்டத்திற்கு விவசாயிகளிடம் கிடைத்த பேராதரவால், வெறும் 10 நாட்களில் 3 லட்சம் மரக்கன்றுகளை தங்கள் நிலங்களில் நடுவதற்கு விவசாயிகள் விருப்பம் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து தொண்டாமுத்தூர் ரோட்டரி சங்கத்தின் நிதியுதவியுடன் 1 லட்சம் மரக்கன்றுகளை வெறும் 2 மாதங்களில் விவசாயிகளுக்கு விநியோகித்தோம். பின்னர், கோவை கட்டுனர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கத்துடன் இணைந்து 2-வது கட்டமாக 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை அக்டோபர் 10-ம் தேதி தொடங்கினோம். இன்று கோவை ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்துடன் இணைந்து 3-வது கட்டமாக 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கியுள்ளோம். தொண்டாமுத்தூரின் பசுமை பரப்பை 33 சதவீதமாக அதிகரிக்கும் வரை நாங்கள் தொடர்ந்து செயல் செய்வோம். இத்திட்டத்தால் தொண்டாமுத்தூரின் சுற்றுச்சூழல் மேம்படுவதோடு இங்குள்ள விவசாயிகளின் பொருளாதாரமும் மேம்படும். நொய்யல் ஆறும் வருடம் முழுவதும் ஓடும் சூழல் உருவாகும்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகளை வழங்கிய எஸ்.எஸ்.வி.எம் கல்வி நிறுவனத்தின் தாளாளர் திருமதி. மணிமேகலை மோகன் அவர்கள் பேசுகையில், “மரம் நடுவது ஒரு பெரிய பாக்கியம். மேலும், இது புண்ணியமான செயல். இதை காவேரி கூக்குரல் இயக்கம் முன்னெடுத்து இருப்பது பாராட்டுக்குரியது” என்றார்.

பூமராங் ஐஸ்கிரீம் நிறுவனத்தின் உரிமையாளர் திரு. வஞ்சிமுத்து அவர்கள் பேசுகையில், “வர்த்தக துறையில் இருக்கும் என்னை போன்றவர்கள் தினமும் வங்கிகளுக்கு செல்வது, வரவு செலவு கணக்குகளை பார்ப்பது போன்ற செயல்களிலேயே ஈடுப்பட்டுள்ளோம். எனக்கு பொருளாதார ரீதியாக கடன் இல்லை. ஆனால், இயற்கையிடம் இருந்து காற்று, தண்ணீர் போன்றவற்றை கடனாக பெறுகிறேன். அந்த கடனை திருப்பி செலுத்துவதற்காக ஈஷாவின் வழிகாட்டுதலில் எனது நிலத்தில் மரங்களை நட்டு வளர்த்து வருகிறேன். என்னை பொறுத்தவரை மரம் நடுவது என்பது இயற்கையிடம் இருந்து பெற்ற கடனை திருப்பி செலுத்தும் கடமையாகவே பார்க்கிறேன்” என்றார்.

இதேபோல், நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்கிய அரோமா  ஸ்ரீ மகாலட்சமி டெய்ரி நிறுவனத்தின் இயக்குநர் அரோமா திரு.பொன்னுசாமி அவர்கள் விவசாயிகளுக்கு 1 லட்சம் மரக்கன்றுகள் வழங்க நிதியுதவி அளிப்பதாக வாக்குறுதி அளித்தார். 

இதையும் படிங்க - காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காவேரி கூக்குரல் சார்பில் தமிழகத்தில் 1.85 லட்சம் மரக்கன்றுகள் நட்ட விவசாயிகள்

விழாவில் கோவை ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் திரு. சிவக்குமார் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். சங்கத்தின் துணைத் தலைவரும் ஹரிபவனம் ஓட்டல் உரிமையாளருமான திரு.பாலசந்தர் ராஜூ நன்றியுரை வழங்கினார். மேலும், விழாவில் அன்னப்பூர்ணா குழுமத்தின் தலைவர் திரு. விவேக், ஆனந்தாஸ் ஓட்டல் உரிமையாளர் திரு.வெங்கடேஷ் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று மாணவிகளுடன் சேர்ந்து விவசாய நிலத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தனர். 

click me!