ஈஷா அவுட்ரீச் சார்பில் புதிதாக 2 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தொடக்கம்

By karthikeyan VFirst Published Dec 28, 2021, 4:35 PM IST
Highlights

ஈஷா அவுட்ரீச் சார்பில் கோவை மாவட்டத்தில் புதிதாக 2 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் இன்று (டிசம்பர் 28) தொடங்கப்பட்டன. தொடக்க விழாவில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சண்முக சுந்தரம் அவர்கள் பங்கேற்று இந்நிறுவனங்களை தொடங்கி வைத்தார்.
 

ஈஷா அவுட்ரீச் சார்பில் கோவை மாவட்டத்தில் புதிதாக 2 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் இன்று (டிசம்பர் 28) தொடங்கப்பட்டன. தொடக்க விழாவில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சண்முக சுந்தரம் அவர்கள் பங்கேற்று இந்நிறுவனங்களை தொடங்கி வைத்தார்.

பொள்ளாச்சி ரோட்டரி ஹாலில் நடைபெற்ற இவ்விழாவில் அவர் பேசியதாவது:

ஈஷா அவுட்ரீச் அமைப்பும், மத்திய வேளாண் துறையின் கீழ் இயங்கும் சிறு, குறு விவசாயிகள் கூட்டமைப்பும் (Small Farmers Agri Consortium - SFAC) இணைந்து ஆனைமலையில் அருள்மிகு சோமேஸ்வரர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தையும், கிணத்துக்கடவில் ஸ்ரீ வேலாயுதசாமி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தையும் இன்று தொடங்கி இருக்கின்றன. இந்த 2 நிறுவனங்களிலும் தலா 300 விவசாயிகள் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.

விவசாயிகள் அதிகம் இருக்க கூடிய கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தொடங்குவதற்கு ஈஷாவின் வெள்ளியங்கிரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் முன்னோடியாக இருந்துள்ளது. அதேபோல், இப்போது புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த 2 நிறுவனங்களும் சிறப்பாக செயல்பட்டு மேலும் பல உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தொடங்குவதற்கு முன்மாதிரி நிறுவனங்களாக உருவெடுக்க வேண்டும்.

இந்தியாவில் 1970-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் ஒரு விவசாயியிடம் சராசரியாக 2.3 ஹெக்டெர் விவசாய நிலம் இருந்தது. ஆனால், 2015-ம் ஆண்டு கணக்கெடுப்பில் அந்த அளவு 1.08 ஹெக்டராக குறைந்துள்ளது. இப்படி மிக குறைந்த நிலங்களை வைத்து கொண்டு விவசாயிகள் தனி தனியாக விவசாயம் செய்து லாபம் ஈட்டுவது மிகவும் சிரமம். அதற்கு பதிலாக ஆயிரம் விவசாயிகள் ஒன்றாக சேர்ந்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை தொடங்கி தங்கள் பொருட்களை விற்பனை செய்தால் நல்ல லாபம் பார்க்க முடியும். அத்துடன், தங்கள் பொருட்களை வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்ய முடியும்.

2019-ம் ஆண்டு உலக சந்தையில் டி.ஏ.பி உரம் டன் ரூ.15 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது. ஆனால், தற்போது ஒரு டன் டி.ஏ.பி உரம் 1.20 லட்சமாக பன்மடங்கு விலை உயர்ந்துள்ளது. இதனால், மத்திய, மாநில அரசுகள் இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. மத்திய அரசு கடந்த நிதியாண்டில் இயற்கை விவசாய மேம்பாட்டிற்காக ரூ.6,500 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. வரும் நிதியாண்டில் இது ரூ.10 ஆயிரம் கோடியாக உயர வாய்ப்புள்ளது. ஆகவே, விவசாயிகள் ரசாயன விவசாயத்தில் இருந்து இயற்கை விவசாயத்திற்கு மாற முன் வர வேண்டும்.

ஈஷா விவசாய இயக்கம் பல்வேறு பயிற்சி வகுப்புகள் மூலம் சுமார் 12 ஆயிரம் விவசாயிகளுக்கு இயற்கை விவசாய பயிற்சி அளித்துள்ளது பாராட்டுக்குரியது. விவசாயிகளின் நலனுக்காக சத்குரு அவர்கள் மேற்கொண்டு வரும் பணிகளும் பாராட்டுகுரியவை.

இவ்வாறு பொள்ளாச்சி எம்.பி. பேசினார்.

ஈஷா விவசாய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா அவர்கள் திட்ட விளக்க உரை ஆற்றுகையில், “விளைப்பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதும், விளைவித்த பொருட்களுக்கு லாபகரமான விலை பெறுவதும் தான் விவசாயிகளுக்கு இருக்கும் இரண்டு பெரிய சவால்கள். இந்த இரண்டிற்கும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தீர்வு அளிக்கிறது. மேலும், சொந்தமாக உரம் விற்பனை செய்வது, சொட்டு நீர் பாசனம் அமைப்பது, பல்வேறு வித விவசாய பயிற்சிகள் அளிப்பது போன்றவற்றின் மூலம் விவசாயிகளின் செலவுகள் குறைகிறது. 2013-ம் ஆண்டு ஈஷா அவுட்ரீச் தொடங்கிய வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் பல்வேறு சவால்களை கடந்து தற்போது தமிழ்நாடு அளவில் முதல் இடத்திலும் இந்திய அளவில் 8-வது இடத்திலும் உள்ளது. முதல் ஆண்டில் ரூ.45 ஆயிரம் Turn over செய்த இந்நிறுவனம் தற்போது ரூ.14 கோடி Turn over செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளது” என்றார்.

இவ்விழாவில் பொள்ளாச்சி மாவட்ட துணை ஆட்சியர் திரு.தாக்கரே சுபம் ஞானதேவ்ராஜ், சிந்தியா மருத்துவமனை தலைவர் டாக்டர்.வரதராஜன், தொழில் வர்த்தக சபை தலைவர் திரு.ஜி.டி. கோபால கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். எழுத்தாளர் மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் வரவேற்புரையும், வெள்ளியங்கிரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் திரு.குமார் நன்றி உரையும் ஆற்றினர்.
 

click me!