கொரோனா வைரஸ் பற்றி வதந்தி வீடியோ... ஹீலர் பாஸ்கருக்குக் காப்பு போட்ட போலீஸ்!

By Asianet TamilFirst Published Mar 20, 2020, 8:58 PM IST
Highlights

“சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் இலுமினாட்டிகளின்  சதி. மக்கள் தொகையைக் குறைக்கவே அவர்கள் இந்தச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். நம்முடைய அமைச்சர்கள் எல்லாம் எதை செய்ய வேண்டும் என்ற தகவல்களையும் அந்த இலுமினாட்டிகள்தான் தருகின்றனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்படாதவர்களைக்கூட திட்டமிட்டு ஊசிப்போட்டு கொலை செய்யப்படுகின்றனர்” என்று பேசியிருந்தார்.
 

கொரோனா வைரஸ் குறித்து சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியதாக  ஹீலர் பாஸ்கரை போலீஸார் கைது செய்துள்ளனர்.


உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்திவருகிறது. அந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 10 ஆயிரம் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. கொரோனா வைரஸ் பற்றி சமூக ஊடங்களில் வதந்தியுடன்கூடிய செய்திகள் நிறைய வெளிவந்தவண்ணம் உள்ளன. 
கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரிருத்திருந்தது. இந்நிலையில், கொரோனா வைரஸ் குறித்து  ஹீலர் பாஸ்கர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில், “சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் இலுமினாட்டிகளின்  சதி. மக்கள் தொகையைக் குறைக்கவே அவர்கள் இந்தச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். நம்முடைய அமைச்சர்கள் எல்லாம் எதை செய்ய வேண்டும் என்ற தகவல்களையும் அந்த இலுமினாட்டிகள்தான் தருகின்றனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்படாதவர்களைக்கூட திட்டமிட்டு ஊசிப்போட்டு கொலை செய்யப்படுகின்றனர்” என்று அந்த வீடியோவில் பீதியூட்டும் வகையில் பேசியிருந்தார்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இதையடுத்து ஹீலர் பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை சுகாதாரத்துறை அதிகாரி ரமேஷ், குனியமுத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் ஹீலர் பாஸ்கரை போலீஸார் கைது செய்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வீட்டிலேயே பிரசவம் பார்க்கலாம் என்ற வீடியோ வெளியிட்டார். அப்போது அவரை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் குறித்து பேசி கைதாகியுள்ளார். 

click me!