இப்படி அந்த பகுதியில் பிரபலமான மற்றும் துடிப்பாக மக்கள் சேவையாற்றக்கூடிய நபர்களை தேர்வு செய்து பாஜக பதவி வழங்கி வருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழக பாஜக தலைவர் நீண்ட காலமாக நியமிக்கப்படாமல் இருந்த நிலையில், கடந்த மார்ச் மாதம், அக்கட்சியின் தேசிய எஸ்.சி., எஸ்.டி, ஆணைய துணைத் தலைவராக இருந்த எல்.முருகனை பாஜக மேலிடம் நியமித்தது. இந்நிலையில், தமிழக பாஜக கட்சிப் பதவிகளுக்கான காலமான மூன்று ஆண்டுகளை பதவியில் இருந்தவர்கள் நிறைவு செய்துவிட்டதால் புதிய உறுப்பினரகளை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்று வந்தது. அதனடிப்படியில், தமிழக பாஜக புதிய மாநில நிர்வாகிகள், அணி, பிரிவு நிர்வாகிகள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டனர்.
தேர்தலுக்கு முன்னதாகவே ஆயத்த வேலைகளை தீவிரமாக கையில் எடுத்துள்ள தமிழக பாஜக திமுகவில் இருந்து விலகிய வி.பி.துரைசாமி, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்பட மொத்தம் 10 பேரை துணை தலைவர்களாக நியமித்தது கவனம் ஈர்த்தது. அத்தோடு மட்டுமின்றி தமிழ் சினிமா பிரபலங்களும் தமிழக பாஜக நிர்வாகிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். கெளதமி, நமீதா, ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி, சின்னத்திரை பிரபலம் குட்டி பத்மினி ஆகியோரும் மாநில செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ள காயத்ரி ரகுராம் ஏற்கனவே களத்தில் இறங்கிவிட்டார். தமிழகத்தையே உலுக்கிய கந்த சஷ்டி கவசம் அவதூறு விவகாரத்தில், இசையமைப்பாளர் தீனாவை வைத்து காயத்ரி ரகுராம் பாஜக சார்பில் வெளியிட்ட வெற்றிவேல், வீரவேல் பாடல் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானது. அதேபோல் நடிகை நமீதாவும் தனது பணிகளை தொடங்கிவிட்டார். எல்லோருக்கும் முன்னதாகவே பாஜக பெண் நிர்வாகியான நாஞ்சில் செளதாமணி கொரோனா காலத்தில் உணவின்றி தவிப்போருக்கு உணவு வழங்கி வருகிறார். ஏழை, எளியோருக்கு மட்டுமின்றி கொரோனா வாரியர்ஸ் ஆன காவலர்களுக்கு உணவு கொடுத்து வருகிறார் செளதாமணி. இப்படி இளம் நிர்வாகிகள் பலரும் பதவி கிடைத்த குஷியில் படுவேகமாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கோவை மாவட்டத்திற்கான பாஜக நிர்வாகிகளை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நியமித்துள்ளார். அதில் கோவை கே.என்.ஜி. புதூரைச் சேர்ந்த பீரித்தி லட்சுமிஅயி இளைஞர் அணி மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மருத்துவரான பீரித்தி லட்சுமி ஏற்கனவே கோவையில் மிகவும் பிரபலமானவர். மருத்துவ சேவையோடு சேர்த்து சமூக சேவைகளையும் செய்து வருகிறார்.
சமீபத்தில் கூட மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதுமட்டுமின்றி தமிழ் கடவுள் முருகனின் கந்த சஷ்டி கவசத்தை அவதூறாக விமர்சித்த கறுப்பர் யூ-டியூப் சேனலுக்கு எதிராக பல போராட்டங்களையும் முன்னெடுத்து வருகிறார். இப்படி அந்த பகுதியில் பிரபலமான மற்றும் துடிப்பாக மக்கள் சேவையாற்றக்கூடிய நபர்களை தேர்வு செய்து பாஜக பதவி வழங்கி வருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.