கோவை நீட் சர்ச்சையில் திடீர் திருப்பம்.. மாணவருக்கு ஏற்பட்ட சிக்கல் நீங்கியது..!

By Manikandan S R SFirst Published Sep 26, 2019, 2:14 PM IST
Highlights

கோவை மருத்துவக் கல்லூரியில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து இரண்டு பேர் சேர்ந்ததாக எழுந்த புகாரை அடுத்து நடந்த விசாரணையில் ஒருவர் முறைகேட்டில் ஈடுபடவில்லை என்பது தெரியவந்துள்ளது.

தேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா என்கிற மாணவர் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து சேர்ந்ததாக தெரிய வந்ததையடுத்து பெற்றோருடன் அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவரிடம்  சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சர்ச்சையை தொடர்ந்து தமிழகத்தில் இருக்கும் மருத்துவ கல்லூரிகளில் நீட் தேர்வு மூலம் சேர்ந்த மாணவர்களின் ஆவணங்களை சரி பார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவக் கல்லூரி நிர்வாகமும் மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்து வருகிறது.

இந்தநிலையில் கோவையில் இருக்கும் பிஎஸ்ஜி மருத்துவக்கல்லூரியில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு போது இரண்டு பேரின் புகைப்படங்கள் வேறுபட்டு இருப்பதாக கல்லூரி நிர்வாகம் சந்தேகித்தது. ஒரு மாணவரும் ஒரு மாணவியும் நீட் தேர்வின் போது கொடுத்த புகைப்படமும் கல்லூரியில் சேரும்போது கொடுத்த புகைப்படமும் வேறுவேறாக இருந்ததாக கருதியது.

இதையடுத்து மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சார்பாக மருத்துவ கல்லூரி இயக்குனர் அலுவலகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்படி முறைகேடு செய்ததாக சந்தேகிக்கப்படும் மாணவர் மற்றும் மாணவி ஆகிய இருவரையும் சென்னை எழும்பூரில் உள்ள மருத்துவக்கல்லூரி இயக்குனரகத்திற்கு வரும்படி உத்தரவிடப்பட்டது. அங்கு அவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு நடந்த விசாரணையில் மாணவர் ஆள்மாறாட்டம் செய்யவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. 

இதையடுத்து அவருக்கு ஏற்பட்ட சிக்கல் நீங்கி இருக்கிறது. மாணவியின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

click me!