விடிய, விடிய காத்திருக்கும் மக்கள்... ஆர்வத்தை பார்த்து மிரண்டு போன ஆட்சியரின் அதிரடி உத்தரவு...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 14, 2021, 11:53 AM IST
Highlights

கடந்த சில நாட்களாகவே மழையிலும், இரவு நேரங்களிலும் தடுப்பூசி முகாம்கள் முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் செய்திகள் வெளியாகின. 

தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தாக்கம் இந்தமுறை மக்கள் நெரிசல் மிகுந்த சென்னையைக் கடந்து கோவையில் மையம் கொண்டது. தினசரி பாதிப்புகள் 5 ஆயிரம் வரையிலும் கண்டறியப்பட்டது. தமிழக சுகாதாரத்துறையின் அதிரடி நடவடிக்கைகள், தளர்வுகற்ற ஊரடங்கு மூலமாக கோவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. 

அதேசமயத்தில் 3வது அலை குறித்த அச்சம் காரணமாக மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். கோவையில் 2வது அலையின் தாக்கத்தை நேரடியாக கண்டு உணர்ந்ததால் மக்கள் கொரோனாவிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் அக்கறை காட்டி வருகின்றனர். ஆனால் கோவையில் சில சமயங்களில் ஏற்படும் தடுப்பூசி தட்டுப்பாட்டு காரணமாகவும், டோக்கன் பெறுவதற்காகவும் இரவு 8 மணி முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க ஆரம்பித்துள்ளனர். 

கடந்த சில நாட்களாகவே மழையிலும், இரவு நேரங்களிலும் தடுப்பூசி முகாம்கள் முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் செய்திகள் வெளியாகின. இதையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து கோவை ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா மூன்றாம் அலையை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிறபகுதி மக்கள் இரவே தடுப்பூசி செலுத்தும் மையங்களில் தங்கி தடுப்பூசி செலுத்திக்கொள்வதால் அப்பகுதி மக்களுக்கு தடுப்பூசி கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே மேற்காண்ட சிரமங்களை தவிர்க்கும் பொருட்டு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கீழ்க்காணும் நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

*  வட்டார அளவில் சேமித்து வைக்கப்படும் கொரோனா தடுப்பூசிகள் தினமும் எந்தெந்த பஞ்சாயத்துக்களில் செலுத்தப்படும் விவரம் மற்றும் செலுத்தப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கைகளின் விவரம் காலை 8 மணிக்கு அறிவிக்கப்படும். 

* மேற்படி அறிவிக்கப்படும் கொரோனா தடுப்பூசி மையங்களில் காலை 10 மணி முதல்  தடுப்பூசிக்கான டோக்கன்கள் வழங்கப்படும்.  தடுப்பூசிக்கான டோக்கன் பெற்றவர்களுக்கு காலை 11 மணி முதல் தடுப்பூசி செலுத்தப்படும்.  அந்தந்த பகுதியை சார்ந்த பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

* மேற்படி மையங்களை கண்காணிக்கும் பொருட்டு வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் காவல்துறை உள்ளடக்கிய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

* தடுப்பூசி மையங்களில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்த்து, முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும்.

* கொரோனா தடுப்பூசி மையங்களில் ஏற்படும் குறைகள் மற்றும் ஏதேனும் புகார்கள் இருப்பின் மாவட்ட கொரோனா கட்டுப்பாட்டு அறை இலவச எண் 1077-ற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

click me!