ஓராண்டில் ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் புது சாதனை!

By karthikeyan VFirst Published Mar 23, 2023, 10:02 AM IST
Highlights

காவேரி கூக்குரல் இயக்கம் தமிழ்நாட்டில் நடப்பு நிதியாண்டில் (2022-2023) ஒரு கோடி மரக்கன்றுகளை விவசாயிகளின் பங்களிப்புடன் அவர்களின் நிலங்களில் நடவு செய்து சாதனை படைத்துள்ளது.
 

உலக வன தினம் மார்ச் 21 கொண்டாடப்பட்ட நிலையில் சத்குருவால் தொடங்கப்பட்ட காவேரி கூக்குரல் இயக்கம் தமிழ்நாட்டில் நடப்பு நிதியாண்டில் (2022-2023) ஒரு கோடி மரக்கன்றுகளை விவசாயிகளின் பங்களிப்புடன் அவர்களின் நிலங்களில் நடவு செய்து சாதனை படைத்துள்ளது.

இது தொடர்பாக அவ்வியக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் அவர்கள் கூறுகையில், “நாங்கள் 2004-ம் ஆண்டு முதல் மரம் சார்ந்த விவசாயம் செய்ய விவசாயிகளை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறோம்.  இதன் பயனாக, இதுவரை 8.4 கோடி மரக்கன்றுகளை விவசாயிகளின் பங்களிப்போடு நடவு செய்துள்ளோம். 1,68,000 விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயம் பற்றி தெரிந்துகொண்டு, அவர்களது நிலத்தில் மரங்களை நடவு செய்துள்ளனர்.

நம்மாழ்வார் நினைவு நாளில் 1.5 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்த காவேரி கூக்குரல் இயக்கம்.

குறிப்பாக, மரம் சார்ந்த விவசாயம் மூலம் காவேரி நதியை மீட்டெடுப்பதற்காகவும், அதைச் சார்ந்துள்ள லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் காவேரி கூக்குரல் இயக்கத்தை சத்குரு அவர்கள் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கினார். இவ்வியக்கத்தின் மூலம் நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டில் ஒரு கோடி மரக்கன்றுகளை விவசாய நிலங்களில் நட இலக்கு நிர்ணயித்து இருந்தோம். 

தமிழ்நாட்டில் சத்குரு ஏற்படுத்தியுள்ள விழிப்புணர்வின் தாக்கத்தாலும், ஈஷா தன்னார்வலர்களின் செயல்பாட்டாலும் இந்த இலக்கை நாங்கள் நேற்று (மார்ச் 20) வெற்றிகரமாக நிறைவு செய்து உள்ளோம். இதேபோல், கர்நாடக மாநிலத்தில் இந்தாண்டு 1.30 கோடி மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், மரம் சார்ந்த விவசாய முறையின் பயன்கள் குறித்து கூறுகையில், “அனைத்து விவசாயிகளும் தங்களது நிலங்களில் வரப்போரங்களில் மரங்கள் நடலாம். அதிக நிலம் வைத்திருக்கும் பெரு விவசாயிகள், அவர்களுடைய மொத்த நிலத்தில் குறைந்தப்பட்சம் மூன்றில் பங்கு நிலத்தில் மரங்கள் நடலாம். மேலும், நிலம் முழுவதும் மரங்களை நடவு செய்து, மற்ற பயிர்களை ஊடுபயிராகயும் சாகுபடி செய்யலாம். இவ்வாறு விவசாயிகளின் தேவைக்கேற்ப பல்வேறு விதமாக மர விவசாயம் செய்ய முடியும். மர விவசாயத்திற்கு மாறுவதன் மூலம் விவசாயிகளின் வருமானம் 3 முதல் 8 மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதுமட்டுமின்றி, மரங்களில் சமவெளில் வளரக்கூடிய மிளகு ரகங்களை சாகுபடி செய்வதின் மூலம் கூடுதல் தொடர் வருமானத்தையும் பெற முடியும். மானாவாரி விவசாய நிலங்களிலும் மர விவசாயம் செய்வதற்கான தொழில் நுட்பங்களை ஈஷா வழங்கி வருகிறது.

வேப்ப மரங்களை அதிகம் வளர்க்க வேண்டும்..! காவேரி கூக்குரல் நிகழ்ச்சியில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ வேண்டுகோள்

ஒவ்வொரு தனி விவசாயிக்கும் ஏற்ற வகையில், மண்ணுக்கேற்ற மரங்களை நாங்கள் பரிந்துரைத்து வருகிறோம். மேலும், விவசாயிகளுக்குத் தேவையான டிம்பர் மரக்கன்றுகள் மலிவான விலையில் கிடைக்கும் வகையில், தமிழகம் முழுவதும் 40 ஈஷா நாற்று பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு மரக்கன்றுகள் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்டு ஒரு மரக்கன்று 3 ரூபாய் என விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது. அடுத்துவரும் மழைக்காலத்துக்கு தேவையான மரக்கன்று உற்பத்திக்கான ஆயத்தப் பணிகளையும் தற்போது துவங்கியுள்ளது. மர விவசாயம் குறித்த இலவச ஆலோசனைகள் பெறுவதற்கும், மரக்கன்றுகள் பெறுவதற்கும் 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என கூறினார்.

click me!