செல்லாத நோட்டுகளை சேமித்த 92 வயது மூதாட்டி..! 31 ஆயிரம் பணத்தை மாற்ற முடியாமல் பரிதவிப்பு..!

By Manikandan S R SFirst Published Dec 26, 2019, 11:15 AM IST
Highlights

கோவை அருகே மூதாட்டி ஒருவர் பணமதிப்பிழப்பை பற்றி அறியாமல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளாக 31,500 ரூபாயை சேமித்து வைத்துள்ளார்.
 

கோவை மாவட்டம் சரவணம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜ்வாலா. இவரது மனைவி கமலம்மாள்(92). இந்த தம்பதியினருக்கு பிரேமா, ஜெயந்தி என இருமகள்களும், கோபால் என்கிற ஒரு மகனும் இருக்கின்றனர். மில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த ராஜ்வாலா சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதன்பிறகு மகன் கோபாலுடன் கமலம்மாள் வசித்து வந்தார். கணவர் உயிருடன் இருக்கும் போதே பணத்தை சிறுக சிறுக சேமிக்க தொடங்கியுள்ளார்.

அதன்படி 31 ஆயிரத்து 500 ரூபாய் வரை சேமித்து வைத்துள்ளார். ஆனால் அந்த பணம் முழுவதும் தற்போது பயன்பெறாத வகையில் இருக்கிறது. கமலம்மாள் வைத்திருப்பது அனைத்தும் செல்லாதவை என அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள். கடந்த 2016 ம்  நவம்பர் 8 ம் தேதி இரவு கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாதவை என பிரதமர் மோடி அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார். அதுபற்றி அறியாத கமலம்மாள் ரூபாய் நோட்டுகளை சேமித்து வைத்திருக்கிறார்.

கமலம்மாளின் மகன் மோகன் கூறும்போது, 2016ம் ஆண்டிலேயே 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என தனது தாயிடம் கூறியதாகவும் அப்போது அந்த நோட்டுகள் தன்னிடம் இல்லை என அவர் தெரிவித்ததாக கூறியிருக்கிறார். இந்தநிலையில் தற்போது வீட்டை துப்பரவு செய்யும் போது, கமலம்மாளின் பழைய பீரோவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். தற்போது வங்கியில் அவற்றை மாற்ற மறுப்பதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுபற்றி கமலம்மாள் கூறும்போது,மில்லில் உழைத்து சிறுக சிறுக பணத்தை சேமித்த வைத்ததாகவும் அவை அனைத்தும் செல்லாதவை என அறிந்து அதிர்ச்சி அடைந்ததாக கூறியிருக்கிறார். வயது முதிர்வால் தனக்கு தற்போது மருத்துவ சிகிச்சைக்கு பணம் தேவை படுவதால் அரசு அவற்றை மாற்றி தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

click me!