அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி..! ஒரே நாளில் 3 குழந்தைகள் அடுத்தடுத்து பலி..!

By Manikandan S R SFirst Published Dec 15, 2019, 2:40 PM IST
Highlights

கோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 3 குழந்தைகள் அடுத்தடுத்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை கடந்த இரண்டு மாதங்களாக பரவலாக பெய்து வந்தது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. இவ்வாறு தேங்கிய மழை நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, வைரஸ் போன்ற காய்ச்சல்கள் வேகமாக பரவ தொடங்கியது. குறிப்பாக குழந்தைகளே அதிகம் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதை கட்டுப்படுத்த அரசு சார்பாக பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 குழந்தைகள் அடுத்தடுத்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருப்பூர் மாவட்டம் நாச்சியாம்பாளையத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகள் அஷ்விகா(5). டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமி, கோவை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதேபோல கோவையைச் சேர்ந்த மோனிஷா என்கிற 5 வயது சிறுமியும், திருப்பூரைச் சேர்ந்த சர்வேஷ் என்கிற 1 வயது குழந்தையும் அதே மருத்துவமனையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இவர்கள் இருவருக்கும் டெங்கு பாதிப்பு இருந்ததா என்பது குறித்து சுகாதார துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களாக கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து பலியாகும் சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை உண்டாகி இருக்கிறது.

click me!