
நாங்கள் விரும்பி வேறு காரணத்திற்காக திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று நினைத்திருந்தால் எங்கேயோ தலைமறைவாக இருந்து இருக்க முடியும் என அன்னபூரணி தெரிவித்துள்ளார்.
அன்னபூரணி அரசு அம்மா' என்றும், 'ஆதிபராசத்தி அம்மா அவதரித்து விட்டார்' என்றும் கடந்த இரண்டு தினங்களாக, சமூக வலைத்தளங்களில், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிகம் வைரலாகி வருகிறது. நட்சத்திர ஹோட்டல் ஒன்றில், அந்த பெண்மணி இருக்கை ஒன்றில் அமர்ந்திருக்க, அவரது கழுத்தில் மாலைகள் அதிகம் போடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட, கடவுளைப் போல அலங்கரிக்கப்பட்ட அந்த பெண்மணியை, பக்தர்கள் ஒவ்வொருவராக வந்து, காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று செல்கின்றனர். பதிலுக்கு, அந்த பெண்மணியும் பக்தர்களுக்கு அருள் பாவித்து, ஆசீர்வாதம் வழங்கி அனுப்புகிறார்.
இந்நிலையில், ஜனவரி 1ம் தேதி செங்கல்பட்டில் ஒரு தனியார் மண்டபத்தில் அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அனுமதியின்றி இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக அன்னபூரணி அரசு அம்மா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், பிரபல தனியார் யூடியூப் சேனலுக்கு அன்னபூரணி அரசு அம்மா பேட்டியளிக்கையில்;- நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. நான் ஓடி ஒளிந்து விட்டதாக வதந்தி பரவுகிறது. அதனால் நேரடியாக வந்திருக்கிறேன். நான் இதுவரை என்னை சாமி என்றோ ஆதிபராசக்தி என்று கூறவில்லை. யாரிடமும் என்னை நம்புங்கள், என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று நான் பேசவில்லை. என்னை பார்க்கும் போது அவர்களுக்கு ஒரு உணர்வு ஏற்படுகிறது. அது ஒரு தாய்க்கும் குழந்தைக்கும் இடையே ஏற்படுகிற ஒரு உணர்வு. அப்படித்தான் மக்கள் என்னை நாடி வருகின்றனர்.
ஆனால் அந்த உணர்வை பலர் கொச்சைப் படுத்துகின்றனர். நானும் அரசுவும் இணைந்ததே இந்த நோக்கத்திற்காகத்தான். எங்கள் இருவருக்குள்ளும் ஒரே சக்தி தான் இருந்திருக்கிறது. அது இப்போது தான் எங்களுக்கு தெரிகிறது. நாங்கள் விரும்பி வேறு காரணத்திற்காக திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று நினைத்திருந்தால் எங்கேயோ தலைமறைவாக இருந்து இருக்க முடியும். அந்த சக்தியின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்பதனால்தான் ஊடக வெளிச்சத்திற்கு வந்திருக்கிறோம். அதனால் தான் நீங்கள் எங்களை கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனக்குள் இருக்கும் சக்தியை புரிந்து கொள்ளாமல் என்னை அவமானப்படுத்த முயற்சிக்கிறீர்கள்.
என்னை அவமானப்படுத்துவதாலோ, என்னை புகழ்வதாலோ, எனக்குள் எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. என்னைப் பொறுத்தவரையில் நான் மதங்களுக்கு அப்பாற்பட்டவள், கடவுள் என்பதே இல்லை, அது ஒரு சக்தியாக இருக்கிறது. அது எனக்குள் இருக்கிறது என்று உணர்கிறார்கள். அதை நான் சொல்வதால் உங்களுக்கு புரிய போவது இல்லை, சிலருக்கு அது புரிந்ததால் தான் என்னை தேடி வருகின்றனர். எனது காலில் விழுந்து எனக்கு மாலை மரியாதை செய்யுங்கள் என்று நான் யாரிடமும் கேட்டதில்லை. அவர்களாகவே செய்கிறார்கள். எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் என்னை தேடி வருகின்றனர்.
இந்த விஷயத்தை நம்ப வைக்க முடியாது என்றும் அங்கு வந்து பார்த்தால் உணர்ந்து கொள்வார்கள். என்னை நம்பி நூறு குழந்தைகள் வந்துள்ளார்கள் அவர்கள் உணர்ந்து உள்ளார்கள் என்றும் கூறினார். அங்கு வந்து கதறி அழும் மக்கள் பயிற்சியில் இல்லாத மக்கள் தான் என்றும் தெரிவித்துள்ளார். சக்தியை உணர வைப்பதற்காக நிரூபிப்பதற்காக நான் இங்கு வரவில்லை. இந்த சக்தி பிரபஞ்சத்துக்கு சொந்தம் என்றும் அதனை பேசி புரிய வைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
சொல்வதெல்லாம் உண்மையில் பங்கேற்றவர் இந்த அன்னபூரணி என்று உங்கள் குழந்தைகளுக்கு தெரியுமா? அதற்கு அன்னபூரணி என்னோட குழந்தைகளுக்கு எல்லாம் தெரியும். என்னோட தனிப்பட்ட விஷயத்தை எல்லாம் கேட்கமாட்டார்கள். ஒரு உடம்பில் இரு சக்திகள் தான் செயல்பட்டது. தற்போது ஒன்றாக செயல்படுகிறது என்பது எல்லாமே என்னுடைய குழந்தைகளுக்கும் தெரியும். நாங்கள் இருவரும் பிரபஞ்சத்திற்கே சொந்தமானவர்கள். தனிப்பட்ட ஆட்களுக்கு சொந்தம் கிடையாது. அதை உணர்ந்தால் தாய் என்று வருவார்கள். அதை உணராதவர்கள் இப்படி கால முழுவதும் பேசிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். என்னுடைய கணவர் அரசு மாரடைப்பால் உயிரிழந்தார். உடல் இறந்துவிட்டது. ஆனால், அவருடன் இருந்த உயிர் தன்மைதான் இறக்கவில்லை. அம்மனுக்கு பள பளக்கும் புடவை, உதட்டில் லிப்ஸ்டிக் எதுக்கு. நான் என்னை அம்மன் என்று எங்கும் சொல்லவில்லையே. என்னுடைய இயல்பு நான் அலங்காரம் செய்துகொள்கிறேன். அதுக்காக ஆடையை கிழித்து போட்டுக்கொண்டு வரவேண்டுமா என ஆவேசமாக பேசியுள்ளார்.