பள்ளிகளைத் திறந்தாலோ, ஆன்லைன் வகுப்புகளை நடத்தினாலோ நடவடிக்கை.. தனியார் பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை.!

By vinoth kumarFirst Published Dec 28, 2021, 6:49 AM IST
Highlights

தமிழகத்தில் 1 முதல் 12 வரையிலான பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்விற்காக டிசம்பர் 25-ம் தேதி முதல் 2022 ஜனவரி 2-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

அரையாண்டு விடுமுறை நாட்களில் பள்ளிகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகளுக்கு அரசு தரப்பில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்படிருந்த பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டு நேரடியாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் தற்போது சுழற்சி முறையில் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, வடகிழக்கு பருவமழையும், மாணவர்களுக்கு விடுமுறையை அள்ளித் தந்தது. குறிப்பிட்ட காலத்திற்குள் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தை நடத்தி முடித்து விட வேண்டும் என்று ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டார்கள். தொடர்ந்து மாணவர்களின் நலன் கருதி, அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இந்த சூழலில், அரையாண்டு விடுமுறை வழங்கப்படுமா என்ற ஆர்வம் மாணவர்கள் மத்தியிலும், ஆசிரியர்கள் மத்தியிலும் பரவலாக எழுந்தது. ஏற்கனவே விடுமுறைக்கு மேல் விடுமுறை வழங்கப்பட்டதால் அரையாண்டு விடுமுறை ரத்தாகும் என தகவல்கள் பரவின. ஆனால், பள்ளி மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறை விட வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு, ஆசிரியர் அமைப்பு வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், தமிழக அரசு பள்ளிகளுக்கான அரையாண்டு விடுமுறை உத்தரவைப் பிறப்பித்தது. எனினும், சில பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், தற்போது விடுமுறை தினங்களில் சில பள்ளிகள் திறக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அரசு மெட்ரிக் பள்ளி இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- தமிழகத்தில் 1 முதல் 12 வரையிலான பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்விற்காக டிசம்பர் 25-ம் தேதி முதல் 2022 ஜனவரி 2-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. 

இந்த விடுமுறை தினங்களில் தனியார் பள்ளிகள் நேரடி வகுப்புகள் மட்டுமின்றி ஆன்லைன் வகுப்புகள் நடத்தினாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் உத்தரவிடுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!