பெண் எஸ்.பி. கொடுத்த பாலியல் புகார்... விசாரணை குறித்து உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி வெளியிட்ட அதிரடி தகவல்!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 23, 2021, 12:53 PM IST
Highlights

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்கு நீதிபதி பாராட்டு தெரிவித்தார். 

பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொல்லை அளித்ததாக சிறப்பு டிஜிபியாக இருந்த காவல்துறை உயர் அதிகாரிக்கு எதிரான வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்து வருகிறது. பாலியல் புகார் அளிக்க சென்ற பெண் எஸ்.பி.யை தடுத்த செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி எஸ்.பி. கண்ணனுடன் சேர்த்து கூண்டோடு காவலர்கள் மாற்றம் செய்யப்பட்டிருந்தனர். செங்கல்பட்டு காவல் ஆய்வாளர் சுரேஷ் திருத்தணி குற்றப்பிரிவு ஆய்வாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை தாமாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. அந்த வழக்கின் மீதான் விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பாலியல் குறித்து புகார் அளிக்க வந்த பெண் எஸ்.பி.யை தடுத்தார் என எஸ்.பி. கண்ணனை மட்டும் சஸ்பெண்ட் செய்துள்ளீர்கள். ஆனால் இன்னும் பாலியல் புகாருக்குள்ளான சிறப்பு டிஜிபி சஸ்பெண்ட் செய்யாதது ஏன்? என்று  கேள்வி எழுப்பினார். 

இதையடுத்து காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர் மீது சிபிசிஐடி 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பான வழக்கு ஆவணங்களை மூடி முத்திரையிட்ட உரையில் காவல்துறை தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை உயர் நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் என்றும், விசாரணையின் முன்னேற்றம் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்கு நீதிபதி பாராட்டு தெரிவித்தார். மேலும், விசாரணையை முடிக்க எத்தனை நாட்கள் ஆகும் எனவும் கேள்வி எழுப்பினார். சிபிசிஐடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இது வரை 87 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அவருடைய மொபைல் போன் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சிசிடிவி காட்சிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்தார். ஆய்வு அறிக்கைக்கு காத்து இருப்பதாகவும் விளக்கமளித்தார். மேலும், 8 வாரத்திற்குள் முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்தார். இதனை பதிவு செய்த நீதிபதி, விசாரணையை விரைந்து முடிக்க காவல்துறைக்கு அறிவுறுத்திய நீதிபதி, வழக்கு விசாரணையை ஏப்ரல் 13 ஆம் தேதி தள்ளிவைத்தார். அன்றைய தினம் மேற்கொண்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும் சிபிசிஐடி'க்கு உத்தரவிட்டார்.
 

click me!