ஏன் மே 1ம் தேதி முழு ஊரடங்கு பிறப்பிக்க முடியாது?... உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறிய முழு விளக்கம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 29, 2021, 3:03 PM IST
Highlights

சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முதல் நாளான மே 1ம் தேதி முழு ஊரடங்கை பிறப்பிக்க முடியாது என்பது குறித்து தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜன் வேறு மாநிலத்துக்கு திருப்பி அனுப்புவது, ரெம்டெசிவிர் மருந்து, தடுப்பூசி  பற்றாக்குறை தொடர்பான பத்திரிகை செய்தியின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.ரெம்டெசிவிர், தடுப்பூசி மருந்து. ஆக்சிஜன் இருப்பு விவரங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது. அதேபோல, புதுச்சேரியில் முழு ஊரடங்கை அறிவிக்க கோரிய வழக்கிலும், இந்த விவரங்களை தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்குகள் 3 நாட்களுக்கு முன்பு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, வாக்கு எண்ணிக்கைக்கு முதல் நாள் மற்றும் மே 2ம் தேதி அன்றும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து தமிழகம், புதுச்சேரி அரசுகள் பரிசீலிக்கலாம் எனவும், அதனால் சாதாரண மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க ஏப்ரல் 28ல் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடலாம் எனவும் நீதிபதிகள் பரிந்துரைந்துள்ளனர்.  வாக்கு எண்ணிக்கை தினத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்புடைய வாகனங்கள் மட்டும் அனுமதிக்கலாம் எனவும் நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர். 

தொடர் விழிப்புணர்வு வேண்டும். உடனடி முடிவுகள் எடுக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்.இரு மாநிலங்களிலும் கொரோனா நிலவரங்கள் கண்காணிக்கப்படும் எனத் தெரிவித்த நீதிபதிகள்,வழக்குகள் விசாரணையை ஏப்ரல் 29ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அதன் படி வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, தேர்தல் ஆணையம் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளதாகவும், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

 


இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவுகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினர். தொடர்ந்து பேசிய தலைமை வழக்கறிஞர், வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மே 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏற்கனவே முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அன்றைய தினம் தேர்தல் பணியாளர்கள், முகவர்கள், வேட்பாளர்களுக்கு மட்டுமே பாஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதிலும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், கொரோனா பரிசோதனை முடிவுகள் நெகடிவ் என இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவர் எனக்கூறினார். 

மேலும் தேர்தலுக்கு முன்தினம் மே தினம் அரசு விடுமுறை என்பதால்  மக்கள் நடமாட்டம் பெரிதாக இருக்காது. அன்றைய தினம் தான்   18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதால் முழு ஊரடங்கு பிறப்பித்தால் அவர்களை தடுப்பது போல் ஆகிவிடும் என்றும் தலைமை வழக்கறிஞர் எடுத்துரைத்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் மே 1 ம் தேதி ஊரடங்கு அறிவிப்பதா? வேண்டாமா என அரசே முடிவு செய்து கொள்ளலாம் என அனுமதி அளித்தனர். மேலும், வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஊடகங்களுக்கு அனுமதிப்பது குறித்து விளக்கமளிக்க உத்தரவு பிறப்பித்து, வழக்கு விசாரணையை நாளை தள்ளிவைத்தது. 

click me!