கொரோனாவிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை திடீர் சரிவு ஏன்? சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பரபரப்பு தகவல்.!

By vinoth kumarFirst Published May 12, 2021, 5:43 PM IST
Highlights

கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உச்சத்தை அடைந்து 10 நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறையும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உச்சத்தை அடைந்து 10 நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறையும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

இது தொடர்பாக இன்று பெரம்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்;- கொரோனா நோயில் இருந்து குணம் அடைந்தோர் விகிதம் சற்று குறைந்துள்ளது. இதற்கு மிக முக்கியமான காரணம், மருத்துவ வல்லுநர்களுடன் இணைந்து சிகிச்சை வழிமுறைகளை மாற்றி நிர்ணயித்ததுதான். முன்பெல்லாம் 10 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு மூன்று நாட்கள் தொடர் காய்ச்சல் இல்லை என்றால் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் டிஸ்சார்ஜ் செய்து கொண்டிருந்தோம்.

தற்போது டிஸ்சார்ஜ் செய்த பிறகும் கூட, சில தொற்றாளர்களுக்குச் சிரமங்கள் இருந்தால், ஓரிரு நாட்கள் தேவைப்பட்டால் கோவிட் கவனிப்பு மையத்துக்கு அனுப்பி வைக்கிறோம். இதை குணமடைந்து வீடு திரும்புவதாகக் காட்டாமல், சிகிச்சையில் இருப்பதாகக் காட்டுவதால்தான் குணம் அடைந்தோர் விகிதம் சற்று குறைந்துள்ளதாகத் தோன்றுகிறது. கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் திடீர் இறப்பு எண்ணிக்கையைக் குறைக்க, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தின் கோவிட் தொற்றுப் பரிசோதனைகளின் எண்ணிக்கை எவ்விதத்திலும் குறைக்கப்படவில்லை. எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. கொரோனா தொற்றுப் பரவல் விகிதம் சற்று அதிகரித்து, அதிலேயே நின்ற பிறகு மெதுவாகக் குறையும் என்பதுதான் தொற்று நோய் நிபுணர்களின் கணிப்பாக உள்ளது என ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

click me!