#BREAKING ஸ்டெர்லைட் ஆலையை எப்போது திறப்பீர்கள்?... மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் எழுப்பிய அதிரடி கேள்வி!

By Kanimozhi PannerselvamFirst Published May 5, 2021, 3:47 PM IST
Highlights

தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலையை ஆக்ஸிஜன் உற்பத்திக்காக திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜன் வேறு மாநிலத்துக்கு திருப்பி அனுப்புவது, ரெம்டெசிவிர் மருந்து, தடுப்பூசி  பற்றாக்குறை தொடர்பான பத்திரிகை செய்தியின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழகத்துக்கு ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், புதுச்சேரிக்கு 5 ஆயிரத்து 100 மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

ஒவ்வொரு மாநிலத்தின் பாதிப்பை பொறுத்தே ரெம்டெசிவர் மருந்துகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், மாநிலங்களுக்கிடையே எவ்வித பாரபட்சமும் பார்க்கவில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்தது. கடந்த 30ம் தேதி இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த பிறகு கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. எனவே அதன் பின்னர் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், படுக்கைகள், கொரோனா மருந்துகள் ஆகியவற்றின்  கையிருப்பு குறித்தும் சுகாதாரத்துறை விளக்கம் கேட்டு தெரிவிக்கவும் தமிழகம், புதுச்சேரி அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


புதுச்சேரியைப் பொறுத்தவரை இப்போதைக்கு எவ்வித பற்றாக்குறையும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. ரெம்டெசிவிர் மருந்துகள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதை தடுக்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறித்தும் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதேபோல் தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலையை ஆக்ஸிஜன் உற்பத்திக்காக திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது, எனவே ஆலையை எப்போது திறப்பீர்கள் என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய அரசிடம் உரிய விளக்கம் பெற்று தருவதாக வழக்கறிஞர் தெரிவித்ததை அடுத்து, வழக்கானது நாளை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
 

click me!