டிராபிக் ராமசாமி காலமானார்... சமரசம் இல்லாத சமூக போராளி..!

By Asianet TamilFirst Published May 4, 2021, 10:00 PM IST
Highlights

உடல் நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி காலமானார். 
 

தமிழக அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் சிம்ம சொப்பனமாய் திகழ்ந்தவர் டிராஃபிக் ராமசாமி (87). ஆரம்பக் காலத்தில் ராமசாமி தானே முன்வந்து சென்னை, பாரிஸ் கார்னரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் போலீஸாருக்கு உதவி செய்து வந்தார். இதையடுத்து போக்குவரத்துக் காவல்துறையினர் இவருக்கு ஓர் அடையாள அட்டையை வழங்கினர். அது முதல் ‘டிராஃபிக்’ ராமசாமி என்று அழைக்கப்பட்டார். அதேபோல், உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் மூலம் பல விஷயங்களைப் பொது வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர். தீர்வும் கண்டவர்.


சென்னையில் வரம்பு மீறிக் கட்டப்படும் கட்டிடங்கள், வாகன பார்க்கிங் வசதி இல்லாமல் கட்டப்படும் கட்டிடங்களுக்கு எதிராக இவர் தொடர்ந்த பொதுநல வழக்கு காரணமாக உயர் நீதிமன்றம் பல முக்கியத் தீர்ப்புகளை வழங்கியுள்ளது. அனுமதி பெறாமல் வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு தொடர்ந்து பல உத்தரவுகளை டிராபிக் ராமசாமி பெற்று தந்தவர்.

 
வயது மூப்பின் காரணமாக டிராபிக் ராமசாமிக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவருக்கு  உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை முதல் அவருடைய உடல்நிலை கவலைகிடமாக இருந்தது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதும், அது பலனளிக்காமல் இன்று இரவு 7.45 மணிக்கு டிராபிக் ராமசாமி காலமானார். 

click me!