
இளம்பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகாவை சேர்ந்தவர் மணி அருள் (26). மாங்காடு அடுத்த கோவூரில் வாடகைக்கு வீடு எடுத்து, அதே பகுதியில் உள்ள தனியார் ஜல்லி, கலவை கலக்கும் கம்பெனியில் சூபர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண், அவரது வீட்டின் குளியலறையில் குளித்து கொண்டிருந்தார்.
அப்போது, யாரும் இல்லாத நேரத்தில் மணிஅருள் அங்கு சென்று ஜன்னல் வழியாக தனது செல்போன் மூலம் அதை வீடியோ எடுத்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்து அலறி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். உடனே மணிஅருள், அங்கிருந்து தப்பியோட முயன்றார்.
ஆனால், பொதுமக்கள், அவரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதனையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த வாலிபரை பொதுமக்களிடம் மீட்டனர். பின்னர், அவரது செல்போனை ஆய்வு செய்தபோது, அதில் இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்தது உறுதியானதையடுத்து அவரை கைது செய்தனர்.