விஜயதசமிக்கு கோயில்கள் திறக்கப்படுமா? இல்லையா..? இவங்கதான் முடிவு எடுக்கனும் என விலகிய உயர்நீதிமன்றம்..!

By manimegalai aFirst Published Oct 12, 2021, 4:19 PM IST
Highlights

அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால் மக்கள் அதிகம் கூடுவதை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியதாக தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால் மக்கள் அதிகம் கூடுவதை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியதாக தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

கொரோனா கட்டுப்பாட்டு விதிகளின்படி ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் கோயில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் வரும் வெள்ளிக்கிழமையில் விஜயதசமி வருவதால், கோயில்களில் வழிபட அனுமதிக்க உத்தரவிடும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த ஆர்.பொன்னுசாமி என்பவர் தாக்கல் செய்த மனுவில், ஏற்கனவே வழிபாட்டு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தரிசனத்திற்காக கோயில்களை திறக்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார். அவசர வழக்காக இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், மத்திய அரசின் அறிவுறுத்தலின்படியே கோயில்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து, வழக்கில் அரசின் கருத்தை கூறும்படி நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்தும், மதியம் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, நாளை தமிழக முதலமைச்சர் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரிவித்தார். அப்போது கோயில்களை திறப்பது குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.


வழக்கு விசாரணையின்போது, கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கை குறித்து மத்திய அரசின் சுற்றறிக்கையை சுட்டிக்காட்டிய வழக்கறிஞர், பண்டிகை நாட்கள் வருவதால் அதிகளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கோயில்களை திறப்பது குறித்து தமிழ்நாடு அரசே முடிவெடுக்கும். நீதிமன்றம் இதில் எந்த உத்தரவையும் பிறப்பிக்காது, என்றும் தெரிவித்துள்ளனர்.

click me!