
ஊரடங்கு விதி மீறலுக்காக வாகனத்தை கைப்பற்றுதல் கூடாது, கைப்பற்றினால் சிறிதுநேரத்தில் விடுவிக்கவேண்டும் என டிஜிபி திரிபாதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக நாளை முதல் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், ஊரடங்கு விதி மீறி வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கொரோனா முழு ஊரடங்கு நாளை அமல்படுத்தப்படுவதையொட்டி காவல்துறையினரின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து டிஜிபி திரிபாதி அறிவுரைகள் வழங்கி சுற்றறிக்கை ஒன்றை காவல்துறையினருக்கு அனுப்பி உள்ளார்.
அதில், முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களிடம் போலீசார் மிகுந்த கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். எந்த சூழலிலும் கோபமாகவோ, மரியாதை குறைவாகவோ மக்களிடம் போலீசார் நடத்துக்கொள்ளக் கூடாது. ஊரடங்கு விதி மீறலுக்காக வாகனத்தை கைப்பற்றுதல் கூடாது. விதிமுறைகளை மீறும் வாகனத்தை புகைப்படம் எடுத்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும். வாகனத்தை கைப்பற்றினால் சிறிதுநேரத்தில் விடுவிக்கவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.