
உலகம் முழுவதும் Made in tamilnadu என்ற குரல் ஒலிக்க வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் லட்சியம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 75-வது சுதந்திரதினத்தை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் செப்டம்பர் 20 முதல் 26-ம் தேதி வரை ‘வர்த்தகம் மற்றும் வணிக வாரம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக தமிழ்நாட்டில், மாநிலத்தின் ஏற்றுமதித்திறனை வெளிப்படுத்தும் வகையில், “ஏற்றுமதியில் ஏற்றம்- முன்னணியில் தமிழ்நாடு” என்ற பெயரில் மாநாடு நடைப்பெற்றது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற மாநாட்டை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஏற்றுமதி கையேட்டையும் வெளியிட்டார்.
இந்த மாநாட்டில் முதலமைச்சர் முன்னிலையில் சுமார் ரூ.2,120 கோடி மதிப்பீட்டில் பல்வெறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்து துறைகளின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்றும், தொழில்துறை வளர்ந்தால் அனைத்து துறைகளும் வளர்கிறது என பொருள் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், முதலீடு மேற்கொண்டவர்களுக்கு நிச்சயம் அரசு உறுதுணையாக இருக்கும். உலக முன்னணி தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்திய அளவில் தொழில்துறையில் சிறந்த மாநிலமாக தமிழகம் உள்ளதாக குறிப்பிட்ட முதலமைச்சர், மோட்டார் வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி வகித்து வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.
ஏற்றுமதியை பெருக்க தலைமை செயலாளர் தலைமையில் " மாநில ஏற்றுமதி வழிக்காட்டு குழு" அமைக்கப்பட உள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார். 2030-ம் ஆண்டுக்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலராக ஏற்றுமதியை உயர்த்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதோடு, ஏற்றுமதியாளர்கள் மதிப்பு கூட்டல் பொருட்களை உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் பொருட்டு தொகுப்பு சலுகைகள் வழங்கவும் ஒரு திட்டம் வடிவமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் கூறினார். ஒவ்வொரு மாவடத்திலும் மாவட்ட ஏற்றுமதி மையங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக கூறிய முதலமைச்சர், உலகம் முழுவதும் Made in tamilnadu என்ற குரல் ஒலிக்க வேண்டும், இதுவே தமிழக அரசின் லட்சியம் எனவும் குறிப்பிட்டார்.