தீபாவளிக்கு மறுநாள் இப்படியொரு திண்டாட்டமா..? பெருத்த ஏமாற்றத்தில் மக்கள்..!

By Thiraviaraj RMFirst Published Oct 28, 2019, 1:25 PM IST
Highlights

இன்று அசைவ உணவுகளை சமைக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் இறைச்சிக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். 
 


தீபாவளிப் பண்டிகை நேற்று கோலாகலமாக பல இடங்களில் கொண்டாடப்பட்டது. தீபாவளி அன்று சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்வதால் தீபாவளி அன்று பெரும்பாலானோர் அசைவ உணவுகளைத் தவிர்த்துவிடுவர். ஆனால் தீபாவளிக்கு மறு நாள் அனைத்து விதமான அசைவ உணவுகளையும் ஒரு கை பார்ப்பார்கள்.

தமிழ்நாடு அரசும் தீபாவளிக்கு மறுநாளான இன்று (அக்டோபர் 28) அரசு விடுமுறையாக அறிவித்தது. இதனால் இன்று குடும்பத்தினருடன் இறைச்சி சமைத்து சாப்பிட பலரும் விரும்பியிருக்கும் நிலையில் சென்னையில் பல இடங்களில் இறைச்சிக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மகாவீர் நிர்வாண் தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டதன் பேரில் இன்று இறைச்சி கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெருநகர சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத்துறை (கால்நடை மருத்துவப் பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சி கூடங்கள், மகாவீர் நிர்வாண் தினத்தை முன்னிட்டு, திங்கட்கிழமை அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன. இதேபோல் ஆடு, மாடு இதர இறைச்சி விற்பவர்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே அரசு உத்தரவின்படி, கண்டிப்பாக 28ஆம் தேதி அனைத்து இறைச்சி கூடங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சிகளை விற்பனை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. அரசு உத்தரவைச் செயல்படுத்த வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

வழக்கமாக தீபாவளிப் பண்டிகையின் போது துணி, உணவுப் பொருள்கள், பட்டாசு என அனைத்து விற்பனையாளர்களும் நல்ல வருமானம் பார்ப்பர். ஆனால் இந்த ஆண்டு பொருளாதார மந்தநிலை நிலவுவதால் அனைத்து துறையிலும் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தீபாவளி விற்பனை இல்லை என அனைத்து விற்பனையாளர்களும் கூறிவந்தனர்.

இந்நிலையில் இறைச்சி விற்கவும் தடை என்பதால் அசைவ பிரியர்களுடன் இறைச்சி விற்பனையாளர்களும் வியாபாரம் பறிபோன சோகத்தில் உள்ளனர். தீபாவளி அன்று அமாவாசை என்பதால் பலரும் அசைவ உணவுகளை தவிர்த்தனர். மறுநாளான இன்று அசைவ உணவுகளை சமைக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் இறைச்சிக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். 
 

click me!