
கடந்த இரண்டு நாட்களாக சென்னை எழும்பூர் ரயில்நிலையத்தில் எடுக்கப்பட்ட காணொளி ஒன்று வைரலாக பரவி வந்தது. எழும்பூர் ரயில்நிலைய 7வது பிளாட்பாரத்தில் டீ கடை வைத்திருக்கும் நபர் டீ கேனில் தண்ணீர் பிடித்துள்ளார். அவர் தண்ணீர் பிடித்த குழாயில் செல்லும் நீர் ரயில்பெட்டிகளை சுத்தம் செய்யவும் அங்கிருக்கும் கழிவறைகளை தூய்மைப்படுத்தவும் உபயோகிக்கும் நீர் என்று கூறப்படுகிறது.
இதை பயணி ஒருவர் தனது செல்போனில் காணொளியாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் பரவவிட அது வைரலானது. இது ரயில்நிலைய அதிகாரிகளின் கவனத்திற்கும் சென்றது. இதையடுத்து சம்பந்தப்பட்ட கடையை உடனடியாக மூட ரயில்வே வாரியம் உத்தரவிட்டது. அதன்படி தற்போது அக்கடை மூடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, டீ கேனில் பால் சூடாக இருப்பதற்காக வெளிப்பகுதியில் வெந்நீர் பயன்படுத்தப்படும். அதற்காகவே குழாய் தண்ணீரை கடை ஊழியர் பயன்படுத்தி இருக்கிறார் என்றனர்.
கழிவறை நீரில் தேநீர் தயாரிக்கப்படுவதாக வந்த தகவல் உண்மையல்ல என்றும், குழாயில் வந்தது மெட்ரோ வாட்டர் தான் எனவும் கூறியுள்ளனர். அந்த தண்ணீர் தான் நடைமேடைகளில் இருக்கும் குடிநீர் குழாய்களிலும் சப்ளை செய்யப்படுவதாக தெளிவு படுத்தியுள்ளனர். ரயில்நிலையங்களில் பயணிகளுக்கு சுகாதாரத்துடன் கூடிய உணவு வகைகளை தயார் செய்வதற்காக ஆர்.ஓ. தண்ணீரை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அடிக்கடி ஆய்வு பணிகளும் நடந்து வருவதாக கூறியிருக்கின்றனர்.
Also read: கொதிக்கும் நீரில் தவறி விழுந்த 2 வயது குழந்தை..! உடல் வெந்து பரிதாப பலி..!