சென்னையில் அதிகாலையில் இருந்தே தெரு முற்றங்களில் மக்கள் ஒன்று கூடி மேளம் அடித்து பழைய பொருட்களை எரித்து போகியை வரவேற்றனர். இதனால் தற்போது கடும் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களால் இன்று முதல் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இன்று போகியும், நாளை தைப்பொங்கலும், நாளை மறுநாள் மாட்டுபொங்கலும் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக வெளியூர்களில் வசிக்கும் மக்கள் கடந்த 3 நாட்களாக சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றவண்ணம் உள்ளனர். இதன்காரணமாக தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. மக்கள் சிரமமின்றி ஊர்களுக்கு சென்று வர அரசு சார்பாக சிறப்பு பேருந்துகளும், ரயில்களும் இயக்கப்பட்டுள்ளன.
இதனிடையே இன்று போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. 'பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்கிற அடிப்படையில் போகி கொண்டாடப்படுவதால் வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை எரிக்கும் வழக்கத்தை மக்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். சென்னையில் அதிகாலையில் இருந்தே தெரு முற்றங்களில் மக்கள் ஒன்று கூடி மேளம் அடித்து பழைய பொருட்களை எரித்து போகியை வரவேற்றனர். இதனால் கடும் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது.
தற்போது மார்கழி மாதம் நடைபெற்று வரும் நிலையில், மார்கழி பனியையும் விஞ்சும் அளவிற்கு புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. வேளச்சேரி, கிண்டி, திருவான்மியூர், அண்ணா சாலை, தாம்பரம் என நகரின் பல்வேறு இடங்களிலும் புகை சூழ்ந்து காணப்படுகிறது. சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு புகை இருக்கிறது. இதன்காரணமாக சென்னையில் தற்போது காற்று மாசு அதிகரித்துள்ளது. சாதாரணமாக 50ல் இருந்து 100 குறியீடுக்குள் இருந்தால் மட்டுமே காற்று சுவாசிக்க ஏதுவானதாக கூறப்படுகிறது.
ஆனால் சென்னையில் தற்போது காற்று மாசு 200 குறியீடுகளை கடந்து சென்றுள்ளதால் நூரையீரல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனிடையே பழைய பொருட்களையும் பிளாஸ்டிக்கையும் எரித்து காற்று மாசுவை அதிகரிக்க வேண்டாம் என காற்று மாசு கட்டுப்பாடு வாரியம் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.