தலைநகரில் டாஸ்மாக் திறப்பு இல்லை..! தமிழக அரசு அறிவிப்பு..!

By Manikandan S R SFirst Published May 5, 2020, 12:51 PM IST
Highlights

சென்னை மாநகரக் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் மே 7 ஆம் தேதி அன்று திறக்கப்பட மாட்டாது. இந்தக் கடைகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்

இந்தியா முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் அசுர வேகம் எடுத்துள்ளது. நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,550 ஆக உயர்ந்து இருக்கிறது. இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு தமிழ்நாட்டில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மே 7ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மே 7 முதல் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்படும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

நோய் தொற்று அதிகம் இருக்கும் பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்கப்பட மாட்டாது எனவும், கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வெளியே உள்ள மதுபானக்கடைகள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு திறக்கப்படும் எனவும் தமிழக அரசு விளக்கம் அளித்திருந்தது. எனினும் மதுக்கடைகள் திறப்பது கொரோனா வைரஸ் பரவுதலை மேலும் அதிகரிக்கும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே தமிழகத்திலேயே கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் தலைநகர் சென்னையில் மதுக்கடைகள் திறக்கப்பட மாட்டாது என அரசு அறிவித்திருக்கிறது.

இது தொடர்பாக கூறியிருக்கும் தமிழக அரசு, சென்னை மாநகரக் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் மே 7 ஆம் தேதி அன்று திறக்கப்பட மாட்டாது. இந்தக் கடைகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவித்துள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாகவே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது வரை சென்னையில் 1,724 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

click me!