போலி டாக்டர் தணிகாசலம் மீது நடவடிக்கை..! அரசு அதிரடி

By karthikeyan VFirst Published May 4, 2020, 8:44 PM IST
Highlights

கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறி மக்கள் மத்தியில் தவறான தகவலை பரவவிட்டு பொதுநலனுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்ட போலி சித்த மருத்துவர் தணிகாசலம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 

சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் பேரிழப்பை ஏற்படுத்திவருகிறது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகளே கொரோனாவை சமாளிக்க முடியாமல் திணறிவருகின்றன. அதற்கு காரணம் கொரோனாவிற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாதது தான். 

உலகம் முழுதும் உள்ள விஞ்ஞானிகள் கொரோனாவிற்கான மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் இதற்கிடையே, ஆங்காங்கே சில மருத்துவர்கள் தாங்கள் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறி சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்திவருகின்றனர். 

கொரோனா குறித்த வதந்திகளையும் தகவல்களையும் பரப்புவது  The epidemic diseases act and regulations பிரிவு 8ன்படி தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள ரத்னா சித்த மருத்துவமனையின் போலி சித்த மருத்துவர் திருத்தணிக்காசலம், கொரோனா வைரஸூக்கு தான் மருந்து கண்டுபிடித்துவிட்டதாக சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களின் வாயிலாக தகறான தகவலை பரப்பிவிட்டார். 

இந்நிலையில் கொரோனா குறித்து தவறான தகவலை பரப்பி, மக்களின் நலனுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டுவந்த போலி சித்த மருத்துவர் திருத்தணிக்காசலம் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை இயக்குநர், சென்னை காவல்துறையிடம் புகாரளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 

click me!