
தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ‘தமிழகத்தில் கொரோனா ஏறுமுகம் கண்டு வருகிறது. போர் வீரர்கள் போல் மருத்துவ பணியாளர்கள் சேவை செய்து வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்க தயவு செய்து மாஸ்க் அணியுங்கள். கோயில் நிகழ்ச்சி கலாசார நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் மாஸ்க் அணிய வேண்டும்.மதக்கூட்டம், உள்அரங்க நிகழ்வுகள் அரசியல் கூட்டங்களால் கொரோனா பரவி வருகிறது. தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பங்கேற்க வருபவர்கள் மாஸ்க் அணிய வேண்டும்’ என வலியுறுத்தினார்.
இன்றைய கொரோனா தொற்று குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றின் தாக்கம் 2,500ஐ கடந்து பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 83,204 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 2,579 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 8,86,673 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து 1,527 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 8,58,075 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் 19 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 12,719 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 969 பேருக்கும், செங்கல்பட்டில் 250 பேருக்கும், கோயம்புத்தூரில் 273 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.