தீவிரமான மக்கள் பணிக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்பதற்காகவே தெலங்கானா ஆளுநர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தமிழிசை செள்நதரராஜன் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பிய பின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தீவிரமான மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்பதற்காக மனம் உவந்து ராஜினாமா செய்து உள்ளேன். தெலங்கானா மக்கள் என் மீது காட்டிய அன்பிற்கும், புதுச்சேரி மக்கள் காட்டிய அபரிவிதமான அன்பிற்கும் நன்றி உடையவளாக இருப்பேன். ஆளுநராக வாய்ப்பளித்த உள்துறை அமைச்சர், பிரதமர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இதே வேளையில் தனக்கு மக்களிடையே நேரடி பணியாற்றுவதே விருப்பம். இரண்டு மாநிலங்களிலும் மக்கள் ஆளுநராக தான் இருந்தேன். தீவிரமான மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதற்காக எனது விருப்பத்தின் பேரில் ராஜினாமா செய்து உள்ளேன். இதனால் முதலில் எனது ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ள பட வேண்டும். பின்னர் எனது வருங்கால திட்டங்கள் குறித்து அறிவிக்கிறேன் என கூறினார்.
undefined
தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரிடம் தெரிவித்து விட்டு தான் எனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினேன். எனது விருப்பம் என்ன என்பது இருவருக்கும் தெரியும். அதனால் எனது விருப்பத்திற்கு அவர்கள் தடை விதிக்கவில்லை. ஆளுநர் பதவி மூலமாக இன்னும் பல அனுபவம் கிடைத்துள்ளதாக கருதுகிறேன். கடந்த நான்கரை ஆண்டுகளில் நான்கு முதலமைச்சர்களையும், இரண்டு தேர்தல்களையும், ஆளுநர் ஆட்சியையும் நடத்தி இருக்கிறேன். கொரோனாவை சிறப்பாக கையாண்டதற்கு பாராட்டினையும் பெற்றுள்ளேன். இதனால் அனுபவம் அதிகமாகியுள்ளது.
நேரடியான, நேர்மையான அரசியலுக்காக வந்துள்ளேன். இவ்வளவு வசதியான வாழ்க்கையை விட்டு செல்ல வேண்டுமா என்பது தான் அனைவரின் கேள்வியாக இருந்தது. இந்த வசதியான வாழ்க்கையை விட்டு அரசியலுக்கு வருகிறேன் என்றால் மக்கள் எனது அன்பை புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்தார்.