'மதராஸ் மனதே'வை வீழ்த்தி தலைநகரை மீட்ட தமிழர்கள்..! தமிழ்நாடு நாள் விழாவில் மீண்டெழும் வரலாறு..!

By Manikandan S R S  |  First Published Nov 1, 2019, 6:47 PM IST

பிறமொழி பேசும் மக்கள் தமிழ்நாட்டில் இருந்து பிரிந்து சென்று விட்ட நிலையில் 'சென்னை மாகாணம்' என்கிற பெயரே தொடர்ந்து இருந்து வந்தது. அதை மாற்றி தமிழர்கள் வாழும் இந்த நிலத்திற்கு 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டப்பட்ட வேண்டும் கோரிக்கைகள் எழுப்பட்டன. இதே கோரிக்கையை வலியுறுத்தி தியாகி சங்கரலிங்கனார் 78 நாட்கள் உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தார். 


ஒருங்கிணைந்த சென்னை மாகாணம் மொழி அடிப்படையில் கர்நாடகா, கேரளா என பிரிந்து இன்றுடன் 64 ஆண்டுகள் ஆகின்றன. மற்ற எல்லா மாநிலங்களும் இந்த நாளை ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் தமிழ்நாட்டில் இதுவரையிலும் 'தமிழ்நாடு தினம்' கடைப்பிடிக்கப்பட வில்லை. எல்லை பிரிப்பின் போது, தமிழக பகுதிகள் சில அண்டை மாநிலங்களுக்கு தாரைவார்க்கப்பட்டதே இதற்கு காரணம் என்று சிலர் கூறினாலும்,  தமிழகமும் இந்த நாளை சிறப்பாக கொண்டாடவேண்டும் என்று நீண்டநாட்களாக தமிழ் உணர்வாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

Tap to resize

Latest Videos

undefined

இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு இனி ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு நாள் சிறப்பாக கொண்டாடப்படும் என்று பேரவையில் அறிவித்தது. அதற்காக 10 லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டது. அதன்படி இன்று தமிழ்நாடு நாள் கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடந்து வருகின்றன. கவியரங்கம், கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள் என அரசு சார்பாக சிறப்பு நிகழ்வுகள் நடந்து வருகின்றன. பள்ளி, கல்லூரிகளிலும் இந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்பாகவே தனி ஆந்திரத்திற்கான கோரிக்கைகள் வலுப்பெற்றிருந்தது. அதற்கான போராட்டங்களும் தீவிரமாக நடந்து வந்தன. சென்னையை தலைநகராக கொண்ட ஆந்திர மாநிலம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் உண்ணாவிரதம் இருந்த பொட்டி ஸ்ரீராமுலு மரணமடையவே, போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்தன. இதையடுத்து தனி ஆந்திரா உருவாக்கப்படும் என்று அப்போதைய பிரதமர் நேரு அறிவித்தார். ஆனால் ஆந்திராவின் தலைநகர் எது என்று என்று நேரு அறிவிக்காததால், சென்னையை குறி வைத்து தெலுங்கு மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையின் வளர்ச்சியில் தங்கள் பங்கு அபரீதமானது என்று கூறி 'மதராஸ் மனதே' என்கிற கோஷத்துடன் போராட்டத்தில் இறங்கினர்.

இது தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சென்னை, தமிழக தலைநகராகவே தொடர வேண்டும் என்று குரல்கள் எழ தொடங்கியது. 'தலையை கொடுத்தேனும் தலைநகர் காப்போம்' என்கிற முழக்கத்துடன் மா.பொ.சி போன்ற தலைவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போதைய சென்னை மாகாண முதல்வராக இருந்த மூதறிஞர் ராஜாஜியும், சென்னை தமிழகத்துடன் தொடர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். சென்னை, ஆந்திராவிற்கு தாரை வார்க்கப்பட்டால் தான் முதல்வர் பதவியில் இருந்து விலக நேரிடும் என்று பிரதமர் நேருவிற்கு எச்சரிக்கை விடுத்தார். 

தமிழர்களிடையே நிலவிய கடமையான எதிர்ப்பினை தொடர்ந்து மத்திய அரசு தனது முடிவில் பின்வாங்கியது. 1953ம் ஆண்டு அக்டோபர்  1ம் தேதி உருவாக்கப்பட்ட ஆந்திராவின் தலைநகராக கர்நூல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மொழிவாரி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகள் தீவிரமடைந்த நிலையில் 1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி சென்னை மாகாணத்தில் இருந்து கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அந்த நேரத்தில் பல்வேறு போராட்டங்கள், உயிரிழப்புகள் காரணமாக தமிழர்கள் பெருமளவில் வசித்து வந்த தோவாளை, அகத்தீசுவரம், கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை ஆகிய பகுதிகள் தமிழ்நாட்டோடு இணைந்தன. எனினும் தேவிகுளம், பீர்மேடு, செங்கோட்டை வனப்பகுதி மற்றும் நெய்யாற்றின் கரை ஆகியவை தமிழ்நாட்டில் இருந்து பிரிக்கப்பட்டன. திருப்பதி ஆந்திராவுடன் இணைக்கப்பட்ட நிலையில் கடும் போராட்டத்திற்கு பிறகே 1960ல்  திருத்தணி மீட்கப்பட்டது. மார்ஷல் நேசமணி போன்ற தலைவர்களின் போராட்டத்தால் கன்னியாகுமரி தமிழ்நாட்டுடன் இணைந்தது.

பிறமொழி பேசும் மக்கள் தமிழ்நாட்டில் இருந்து பிரிந்து சென்று விட்ட நிலையில் 'சென்னை மாகாணம்' என்கிற பெயரே தொடர்ந்து இருந்து வந்தது. அதை மாற்றி தமிழர்கள் வாழும் இந்த நிலத்திற்கு 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டப்பட்ட வேண்டும் கோரிக்கைகள் எழுப்பப்ட்டன. இதே கோரிக்கையை வலியுறுத்தி தியாகி சங்கரலிங்கனார் 78 நாட்கள் உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தார். அவரை நினைவு கூறும் வகையில் 1967ல் காங்கிரசை வீழ்த்தி ஆட்சிப்பொறுப்பை ஏற்ற அறிஞர் அண்ணா 1968ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி 'தமிழ்நாடு' என பெயர் மாற்றம் செய்யும் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை பேரவையில் தாக்கல் செய்தார். 'தமிழ்நாடு வாழ்க' என்று உறுப்பினர்களின் ஏகோபித்த முழக்கத்துடன் சென்னை மாகாணம், தமிழ்நாடு என பெயர் மாற்றம் பெற்றது.

மொழியை தங்கள் உயிர்க்கு நிகராக கொண்டிருப்பவர்கள் தமிழர்கள். அதனால் தான் ஒவ்வொருமுறை தாய்மொழிக்கு ஆபத்து வரும் சூழல் நெருங்குகையிலும் இனஉணர்வோடு கொதித்தெழுகிறார்கள். போராட்டங்கள், உயிரிழப்புகள் என அனைத்தையும் கடந்து மொழியின் பெருமையோடு உருவான தமிழ்நாடு நாளை சிறப்பாக கொண்டாடுவோம். இழந்த பகுதிகள் மீட்கப்படுகிறதோ இல்லையோ இருக்கிற பகுதிகளை பாதுகாப்போம். முழுமையான தமிழ்நாடு உருவாக பாடுபட்ட தலைவர்களை நினைவில் கொள்வோம்!

 

click me!