அதிதீவிர புயலாக உருவெடுக்கும் 'மஹா'..! நவ.4-இல் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி..! வானிலை மையம் எச்சரிக்கை..!

By Manikandan S R SFirst Published Nov 1, 2019, 2:53 PM IST
Highlights

அடுத்த 12 நேரத்திற்கு மேலும் வடமேற்கு திசை நோக்கி நகரும் மஹா புயல், அதிதீவிர புயலாக மாறும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக கேரளா மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் கனமழை பெய்ய இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு நிலை மஹா புயலாக உருப்பெற்று தீவிரமடைந்தது. இதனால் கடந்த 3 நாட்களாக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வந்தது. இந்தநிலையில் இன்று அதிகாலை காலை 5.30 மணி நிலவரப்படி கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து மேற்கு வட மேற்கு திசையில் 390 கிலோ மீட்டர் தொலைவிலும், லட்சத்தீவு பகுதியில் அம்மினி தீவில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவிலும் வடக்கு வடமேற்கு திசையிலும் மஹா புயல் நிலை கொண்டுள்ளது.

அடுத்த 12 நேரத்திற்கு மேலும் வடமேற்கு திசை நோக்கி நகரும் மஹா புயல், அதிதீவிர புயலாக மாறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக கேரளா மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் கனமழை பெய்ய இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே மஹா புயல் தமிழகத்தை விட்டு விலகிச் செல்வதால், மழை படிப்படியாக குறையும் என்றும் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நவம்பா் 4ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதாகவும் இது மேற்கு, வடமேற்கு திசையில் மத்தியக் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெரும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதன்காரணமாக, தமிழகத்துக்கு நல்ல மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!