இன்னும் இரண்டு புதிய மாவட்டங்கள் உதயம்... தமிழக அரசு அதிரடி முடிவு?

By Asianet TamilFirst Published Aug 23, 2019, 9:12 AM IST
Highlights

கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு ஆகிய புதிய மாவட்டங்களுக்கு தனி அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சுதந்திர தினத்தன்று கோட்டையில் கொடியேற்றி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, வேலூரை மூன்றாகப் பிரித்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று அறிவித்தார். தற்போது அதற்கான பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
 
தமிழகத்தில் மேலும் இரண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட இருப்பதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களை தமிழக பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்கிவருகிறது. அந்த அடிப்படையில் கடந்த ஜனவரியில் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சியைப் புதிய மாவட்டமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.  இதேபோல கடந்த மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் திருநெல்வேலியிலிருந்து தென்காசியைப் பிரித்து அதை ஒரு மாவட்டமாகவும் காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டை பிரித்து தனி மாவட்டமாகவும் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு ஆகிய புதிய மாவட்டங்களுக்கு தனி அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சுதந்திர தினத்தன்று கோட்டையில் கொடியேற்றி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, வேலூரை மூன்றாகப் பிரித்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று அறிவித்தார். தற்போது அதற்கான பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
இந்நிலையில் மேலும் இரு புதிய மாவட்டங்களை உருவாக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தஞ்சாவூர் மாவட்டத்தைப் பிரித்து கும்பகோணத்தைப் பிரித்து புதிய மாவட்டத்தை உருவாக்கவும் கோவையிலிருந்து பொள்ளாச்சியைப் பிரித்து தனி மாவட்டமாகவும் உருவாக்கும் ஆலோசனைகள் நடைபெற்றுவருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த இரு மாவட்டங்களையும் உருவாக்க அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வந்திருப்பதால், புதிய மாவட்டங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
இதுகுறித்து அண்மையில் கருத்து தெரிவித்த வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், “கும்பகோணத்தையும் பொள்ளாச்சியையும் தனி மாவட்டமாக்கும் கோரிக்கை வலுவாக இருப்பதால் அதுகுறித்து முதல்வர் விரைந்து முடிவெடுப்பார்” என்று தெரிவித்திருந்தார். எனவே கும்பகோணம், பொள்ளாச்சி மாவட்டங்கள் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
click me!