கோடை விடுமுறை ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

By karthikeyan VFirst Published Apr 18, 2020, 5:52 PM IST
Highlights

சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் புதுச்சேரி கீழமை நீதிமன்றங்களுக்கான கோடை விடுமுறை ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
 

இந்தியாவில் கொரோனா பரவாமல் தடுத்து, கொரோனாவிலிருந்து முழுமையாக விடுபடும் பணிகளை மேற்கொள்வதற்காக மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட 21 நாட்கள் ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரமே முற்றிலுமாக முடங்கிய நிலையில், மீண்டும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ஊரடங்கு அமலில் உள்ளதால் நீதிமன்ற செயல்பாடுகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. சென்னை உயர்நீதிமன்றத்தில் மட்டும் அவசர வழக்குகள் வீடியோ கான்ஃபரசிங் மூலம் விசாரிக்கப்பட்டுவருகின்றன. 

ஆவணங்களை மட்டும் சரிபார்த்து தீர்ப்பு வழங்கக்கூடிய வழக்குகளும் விசாரிக்கப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதால் நீதிமன்ற செயல்பாடுகளும் முடங்கியுள்ளதால், அதன்பின்னர் மே மாதத்தில் கோடை விடுமுறை விட்டால் பணிச்சுமை அதிகரிக்கும். 

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏபி சாஹி தலைமையில் மூத்த நீதிபதிகள் அடங்கிய நிர்வாகக்குழு கூட்டம் இன்று நடந்தது. அதில், மே 1 முதல் 31ம் தேதி வரையிலான கோடை விடுமுறையை ரத்து செய்வது என முடிவெடுக்கப்பட்டதன் அடிப்படையில், கோடை விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை வெளியிட்ட சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர், சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் புதுச்சேரி கீழமை நீதிமன்றங்களுக்கான கோடை விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே மே 1 முதல் 31 வரை அந்த மாதம் முழுவதும் வழக்கமான நீதிமன்ற பணி நாட்களை போலவே அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!