
தமிழகம் முழுவதும் கொரோனா 2வது அலையின் தீவிரம் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்க உள்ள நிலையில், தன்னுடைய வீட்டில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஸ்டாலின் நேற்று முன்தினம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தார். அதன் படி அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவீத பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி. மளிகைகடைகள், தேநீர் கடைகள் 12 மணி வரை மட்டுமே திறக்கலாம். உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்கப்படும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நாளை முதல் அமலுக்கு வர உள்ள நிலையில், தெற்கு ரயில்வே சார்பில் மற்றொரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாளை முதல் மே 20ம் தேதி வரை சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி இல்லை என்றும், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்றம் மற்றும் ஊடகத்துறையினருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.